ஜூலை 31, நெல்லை (Tirunelveli News): தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் கவின்குமார் (வயது 26). இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கவின்குமார் கடந்த ஜூலை 27ஆம் தேதி திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்துடன் சென்ற போது, சுர்ஜித் என்ற வழிபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வானிலை: அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. ஆகஸ்ட் 2 முதல் வெளுக்கப்போகும் மழை.!
வாலிபர் வெட்டிக்கொலை:
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர், பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது சுர்ஜித் (வயது 24) என்பது தெரியவந்துள்ளது. மேலும், சுர்ஜித்தின் தந்தை சரவணன் தாயார் கிருஷ்ணகுமாரி இருவரும் எஸ்ஐ ஆக பணிபுரிவதும் தெரியவந்தது. இதனையடுத்து சுர்ஜித்திடம் மேற்கொண்ட விசாரணையில், வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அக்காவுடன் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் என் அக்காவிடம் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று பலமுறை எச்சரித்தேன். இருப்பினும், தொடர்ந்து பழகி வந்ததால் ஆத்திரத்தில் அவரை வெட்டிக்கொலை செய்தேன் என்று கூறினார்.
போலீஸ் விசாரணை:
இதனையடுத்து, பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை வழக்கு (Kavin Murder Case) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனிடையே, இந்த கொலை சம்பவத்திற்கு சுர்ஜித்தின் பெற்றோர் தான் காரணம் என்றும், பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தினருடன் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர்களையும் கைது செய்ய கவினின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தினர். அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காதலி வெளியிட்ட வீடியோ:
இந்நிலையில், நேற்று (ஜூலை 30) கவின் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, கவின் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அதில், "நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்பது பற்றி எங்கள் இருவருக்கும் தான் தெரியும். எங்கள் உறவு பற்றி யாரும் பேச வேண்டாம். எங்கள் அப்பா அம்மாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களை விட்டுவிடுங்கள். என்னுடைய உணர்வுகளுக்கும், நான் என்ன நினைக்கிறேன் என்பதற்கும் மதிப்பளியுங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.