டிசம்பர் 13, சென்னை (Chennai): ஆருத்ரா கோல்ட் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 லட்சம் வரை வட்டி தருவதாக கூறி சுமார் ஒரு லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 2438 கோடி வரை மோசடி செய்துள்ளது. இந்த மோசடி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கின் தொடர்பாக ஐயப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹாரிஸ் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தலை மறைவான ஆர்.கே.சுரேஷ்: விசாரணையின் கீழ் இந்த மோசடியில் நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதனை போலீசார் கண்டுபிடித்தனர். ஆர்.கே.சுரேஷ் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 15 கோடி வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் ஆர்.கே.சுரேஷை ஆஜராகுமாறு சம்மன் விடுத்தனர். ஆனால் அவரோ ஆஜர் ஆகாமல் தலைமறைவாகிவிட்டார். NIA Raid: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவாளர்கள் பகீர் தகவல் எதிரொலி: பெங்களூரில் 6 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை..!
துபாயில் இருந்து திரும்பிய ஆர்.கே.சுரேஷ்: இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த ஆர்.கே.சுரேஷ் நேற்று முன்தினம் துபாயில் இருந்து சென்னை வந்திருந்தார். அவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.சுரேஷ் கூறியதாவது, "ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. உடல் நலக் குறைவால் மனைவி ஐ.சி.யூ.வில் இருந்ததால் வெளிநாட்டில் இருந்து வந்தோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நாளையும் ஆஜராக உள்ளேன்" என்றார்.
பரபரப்பு வாக்குமூலம்: நேற்றைய விசாரணையின் பொழுது ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா கோல்டன் நிறுவனத்தை சேர்ந்த ரூசோ என்பவரிடம் இருந்து வங்கி மூலமாகவும் ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் பணம் பெற்றது தெரியவந்துள்ளது. இந்தப் பணத்தை ஒயிட் ரோஸ் என்ற படத்திற்காக பெற்றதாக ஆர்.கே.சுரேஷ் கூறியுள்ளார். அதே நேரம் அந்தப் பணத்தை தனது சொந்த செலவுகளுக்காக அவர் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு இன்றும் ஆர்.கே.சுரேஷ் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளிவர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.