டிசம்பர் 13, சென்னை (Chennai): மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு அரசாணை வெளியீடு: மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6000 வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் நிவாரணத் தொகையினை ரொக்கமாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி புயல் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சமும் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூபாய் 8000 வழங்கப்படவுள்ளது. Lokesh Kanagaraj’s Facebook Hacked: ஹேக் செய்யப்பட்ட லோகேஷ் கனகராஜின் பேஸ்புக்... என்ன நடந்தது?..!
மேலும் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக டோக்கன்கள் வழங்கி நிவாரணம் வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளனர். இந்த நிவாரணங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீ பெரும்புதூர் வட்டத்தில் 3 கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளனர்.