டிசம்பர் 12, சென்னை (Chennai): பொதுவாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் சட்டவிரோதமாக பொருட்களை ஏதும் கொண்டு வருகிறார்களா? என்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினமும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்துள்ளனர். அப்போது, ஏர் இந்தியா விமானம் துபாயில் இருந்து சென்னை (Chennai Airport) வந்துள்ளது. அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு செல்ல இருந்தது.
தங்க பசை பறிமுதல்: எனவே பணியாளர்கள் விமானத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இருக்கை மட்டும் மேலே தூக்கி இருப்பதனை பார்த்து, அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் அந்த இருக்கையின் கீழ் ஒரு பார்சல் இருப்பதனை கண்டு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அந்தப் பார்சலை எடுத்து ஆய்வு செய்ததில், அந்த பார்சலுக்குள் தங்கப் பசை இருப்பதினைக் கண்டறிந்துள்ளனர். அதில் 1.25 கிலோ எடையுடைய தங்கப் பசை இருந்துள்ளது. அதன் மதிப்பு 73 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்தப் பார்சலை யார் கொண்டு வந்தார்கள் யார் அங்கு வைத்தார்கள் என்பதனை பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. அதனைப் பற்றிய ஆய்வு நடந்து வருகின்றது. MP Chief Minister: மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக மோகன் யாதவ் தேர்வு: பாஜக எம்.எல்.ஏ கூட்டத்திற்கு பின் அறிவிப்பு.!
பெண் பயணி கைது: இச்சம்பவம் அரங்கேறிய அதே நாளில் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் சென்னைக்கு வந்த 45 வயது பெண் பயணி ஒருவர் சந்தேகப்படும்படியாக நடந்து கொண்ட காரணத்தினால் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்தப் பெண் ஆடைக்குள் ஐந்து பெரிய தங்க செயின்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் மொத்த எடை 473 கிராம் மற்றும் மதிப்பு 26.27 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் பயணியை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் நடந்த இந்த இரு சம்பவத்தின் மூலம் 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தையே பரபரப்பு அடைய செய்துள்ளது.