ஜூலை 31, சென்னை (Chennai News): தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், நாளொன்றுக்கு 50 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
டெங்கு பரவல் அதிகரித்துள்ள 10 மாவட்டங்கள் :
அதன்படி கடலூர், விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு, கோவை, தஞ்சாவூர், தேனி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வெயில், மழை என வானிலை மாறி மாறி வந்து செல்வதால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுகின்றன. வானிலை மாறுபாட்டின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், டெங்கு பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. வானிலை: அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. ஆகஸ்ட் 2 முதல் வெளுக்கப்போகும் மழை.!
சுகாதாரத்துறை அறிவுறுத்தல் :
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை தெரிவிக்கையில், "டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்கள் வீட்டில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல் அவசியம். இதன் மூலமாக டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க இயலும். சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுவரை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதால் அதனை உடனடியாக கட்டுப்படுத்த, மக்கள் கவனமாக இருக்க விழிப்புணர்வு மேற்கொள்ளுதல் வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.