மார்ச் 27, சென்னை (Chennai News): சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவை (AC Electric Trains in Chennai) விரைவில் தொடங்கவுள்ளது. கோடைகாலத்தின் கொளுத்தும் வெயிலை கருத்தில் கொண்டு, பயணிகள் வசதிக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஏசி மின்சார ரயிலை, தமிழகம் வரும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் புறநகர் மின்சார ரயில்கள், தினசரி பயணிகளுக்கு முக்கியமான போக்குவரத்து சேவையாக விளங்குகிறது. குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு போன்ற வழித்தடங்களில் அதிகமான மக்கள் பயணம் செய்கின்றனர். இங்கு, வழக்கமான மின்சார ரயில்களால் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏசி வசதியுடன் புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறவுள்ளது. வானிலை: 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்.. வானிலை மையம் தகவல்..!
ஏசி மின்சார ரயில் சேவை:
பயணிகளின் கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே ஏசி மின்சார ரயிலை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ரயிலுக்கான பெட்டிகள் சென்னை ஐ.சி.எப். (ICF) தயாரிக்கப்பட்டு, இரண்டு மின்சார ரயில்கள் உருவாக்கப்பட்டன. இதில், ஒரு ரயில் தயாரிப்பு முடிந்து, பிப்ரவரி மாதத்திலேயே ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்த நிலையில், விரைவில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. தற்போது, ரயில்வே அதிகாரிகள் விரைவில் இந்த சேவை பயன்பாட்டுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர். வரும் ஏப்ரல் 06ஆம் தேதி தமிழகம் வர உள்ள பிரதமர் மோடி, பாம்பன் ரயில் பாலத்தையும் ஏசி மின்சார ரயில் சேவையையும் தொடங்கி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணம்:
தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்ததும், அட்டவணை இறுதி செய்யப்படும். பயணிகளுக்காக குறைந்தபட்ச பயண கட்டணம் ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.