அக்டோபர் 10, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது கிழக்கு-தென்கிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்றைய வானிலை (Today Weather):
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Gold Silver Rate Today: வார இறுதியில் ரூ.3,000 உயர்ந்த வெள்ளி.. தங்கம் ரூ.1,320 குறைவு.. ஷாக் நிலவரம்.!
மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், செங்கல்பட்டு, தேனி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.