Death | Electric Shock File Pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 21, லால்குடி (Trichy News): திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து லால்குடி (Lalgudi) அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சக்திவேல் (வயது 25), அப்பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், பேக்கரி கடையின் மேல் பகுதியில் புதிதாக கடையின் பேர் பொறிக்கப்பட்ட விளம்பர பலகையை வைக்கும் பணியில் சக்திவேல் ஈடுபட்டுள்ளார். அப்போது, விளம்பர பலகையில் இருந்த இரும்பு கம்பி கடையின் மேலே சென்ற மின் கம்பியின் மீது உரசியது. இதனால், அதனை பிடித்துக் கொண்டிருந்த சக்திவேலின் மீது மின்சாரம் பாய்ந்தது. Cyber Crime: சைபர் குற்றவாளிகளாக மாற்ற சிறப்பு பயிற்சி; கைதான நபர் அதிர்ச்சி தகவல்..!

புதுமாப்பிள்ளை பரிதாப பலி:

இதில், சக்திவேல் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த சமயபுரம் காவல்துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.