Cauvery Calling Movement (Photo Credit: Facebook)

ஏப்ரல் 26, கோவை (Coimbatore News): சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டையில் நடைபெறும் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.

இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் (Tamil Maran, field coordinator of Cauvery Calling Movement) செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மலைப்பிரதேசங்களில் மட்டுமே மிளகு சாகுபடி செய்ய முடியும் என பெரும்பாலான விவசாயிகள் எண்ணி கொண்டு இருக்கின்றனர். ஆனால், சமவெளியிலும் மிளகு சாகுபடி செய்து அதில் லாபம் எடுக்க முடியும் என்பதை நாங்கள் எங்களுடைய கள அனுபவத்தின் மூலம் கண்டறிந்துள்ளோம். புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள் பல ஆண்டுகளாக மிளகு சாகுபடியை சமவெளியில் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். சில விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு மிளகில் இருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

வேறு எந்த ஊடுப்பயிருலும் இந்தளவுக்கு அதிக லாபம் எடுக்க முடியாது. மேலும், சில விவசாயிகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.இவற்றை எல்லாம் நேரில் ஆய்வு செய்த பிறகு காவேரி கூக்குரல் இயக்கம் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் பயிற்சியை கடந்த 7 ஆண்டுகளாக அளித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இம்மாதம் ஏப்ரல் 28-ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே நாளில் 4 இடங்களில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்த விரிவான கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம். Mahindra XUV 3X0 Teaser: "நமது சிறகுகளே.. அது காருங்க தானே.." மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி டீசர் வெளியீடு..!

கோவை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் என 4 மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளின் மிளகு தோட்டங்களில் இக்கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று மிளகு ரகங்களை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, அதை நட்டு பராமரிக்கும் வழிமுறைகள், அறுவடை செய்யும் முறைகள், விற்பனை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் என பல விஷயங்கள் குறித்து விரிவாக பேச உள்ளனர்.

குறிப்பாக, போடியில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் துணை இயக்குநர் சிமந்தா சைக்கியா, கர்நாடகாவில் உள்ள ICAR - IISR நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் முகமது பைசல், தமது மிளகு ரகங்களுக்கு காப்புரிமை பெற்றுள்ள முன்னோடி விவசாயிகள் திரு. டி.டி. தாமஸ், கே.வி.ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்று பேச உள்ளனர். இதுமட்டுமின்றி, பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகள் தங்களுடைய பல்வேறு சந்தேகங்களை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.