Rose Cotton Candy (Photo Credit: Pexels)

பிப்ரவரி 17, சென்னை (Chennai News): கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாய் ரசாயன கலவை கொண்டு தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் ஹொடாமின்பே.பி (Rhodaminbe.B) என்ற புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம் இருப்பது உறுதியானது‌. அதன் பேரில் அம்மாநிலத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அதிரடியாக தடை விகித்தனர்.

புதுச்சேரியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஆய்வு: இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் பிரதான சுற்றுலா தலங்கள் மற்றும் சென்னை மெரினா கடற்கரை போன்ற இடங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சுமிட்டாய்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில் பஞ்சுமிட்டாயில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் புற்றுநோயை உண்டாகக்கூடிய வேதிப்பொருள் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையிலான குழு பஞ்சுமிட்டாய்க்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது.

Rose Cotton Candy (Photo Credit: Pexels)

வேதிப்பொருள் சேர்க்கையால் தடை: இதனையடுத்து, தற்போது தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய்க்கு மாநில சுகாதாரத்துறை அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. உணவு பொருள் தர கட்டுப்பாட்டு ஆணையம் அளித்த பரிந்துரையின் பெயரில், தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இனி பஞ்சுமிட்டாய் வாங்கி சாப்பிட வழங்க வேண்டாம் என்றும், மாவட்ட வாரியாக பஞ்சு மிட்டாய் விற்பனையை கண்டறிந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.