செப்டம்பர் 04, கோவை (Coimbatore News): தலைநகர் சென்னையில் செப்டம்பர் 1 முதல் டீ, காபி உட்பட பால் பொருட்களின் விலை உயர்வதாக டீக்கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து உயர்ந்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்படுகிறது. காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பால் விலை, டீ, காபித்தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, பெருநகரங்களில் அதிகரித்துள்ள கடை வாடகை மற்றும் பிற வரிகள் போன்றவை காரணமாக விலை உயர்வு அமலாகுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
கோவையில் டீ, காபி விலை உயர்வு :
இது தவிர்த்து சிற்றுண்டிகளாக விற்பனை செய்யப்படும் வடை, பஜ்ஜி, சமோசா போன்றவற்றின் விலையும் உயர்த்தப்பட்டது. போண்டா, பஜ்ஜி, சமோசாவின் விலை குறைந்தபட்சமாக ரூ.15 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபியின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிளாஸ் டீ ரூ.20க்கும், காபி ரூ.26க்கும், பிளாக் டீ உள்ளிட்டவை ரூ.17க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை விட கோவையில் டீ, காபியின் விலை அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வானிலை: சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் மிதமான மழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
கோவை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு :
மேலும் இந்த விலை உயர்வு தொடர்பாக கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கையில் , கடை வாடகை, ஊழியர்களின் சம்பளம் மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக விலை உயர்த்தப்படவில்லை என்பதால் இந்த முடிவு தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.