ஜூலை 29, திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம், அசலியம்மன் கோவில் தெருவில் ஜெயின் ஜூவல்லரி (Jewellery) என்ற பெயரில் நகைக் கடை ஒன்று உள்ளது. இதனை நரேந்திர குமார் என்பவர் நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜித்தேஷ், ஹரிஹந்த் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூலை 28-ஆம் தேதி இரவு 10.53 மணியளவில், இவர்கள் இருவரும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, ராமலிங்கனார் தெரு அருகே இவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர், அடித்து தாக்கி காரில் கடத்தி (Kidnap) சென்றுள்ளார். Aged Woman Killed: பணம், நகைக்காக 68 வயது மூதாட்டி துண்டுதுண்டாக வெட்டிக்கொலை; தம்பதி பகீர் செயல்.. சென்னையில் பயங்கரம்.!
இதனையடுத்து அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், பெங்களூருக்கு கடத்தி செல்லப்பட்ட இவர்களை மேல்செங்கம் சுங்கச்சாவடியில் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து, அந்த கும்பலிடம் விசாரித்த போது, அசலியம்மன் பகுதியில் நகைக் கடை வைத்திருக்கும் ஹன்ஸ்ராஜ் என்பவருக்கு தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, நகை வியாபாரி நரேந்திர குமாரின் இரு மகன்களையும் கடத்தி அவர்களிடம் 70 லட்சம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. ஏற்கனவே 10 லட்சம் மிரட்டி பெற்றுள்ள நிலையில், மறுபடியும் 60 லட்சம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இந்த வழக்கில், நகைக் கடை அதிபர் ஹன்ஸ்ராஜ் மற்றும் பெங்களூரு ரவுடி கும்பலை சேர்ந்த பில்லா, பிரவீன், சீனு, முயல் என்கிற ராஜ்குமார் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து, ஒரு கார் மற்றும் 9 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதில் தலைமறைவாகியுள்ள 6 பேரை தனிப்படை குழு அமைத்து காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.