ஜூன் 05, சித்தேரிப்பட்டு (Kanchipuram News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், சே.நாச்சியார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமஜெயம். இவர் கார் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். ராமஜெயத்தின் மனைவி ரத்தினா. தம்பதிகளுக்கு ராஜலட்சுமி (வயது 5), தேஜா ஸ்ரீ (வயது 2) என்ற 2 மகள்களும், பிறந்து 3 மாதமான ஆண் குழந்தையும் பிள்ளைகளாக இருக்கின்றனர்.
ரத்தினா தனது 3 மாத குழந்தை மற்றும் பெண் பிள்ளைகளோடு சென்னையில் உள்ள தனது தாயாரின் வீட்டில் இருந்துள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர, ராமஜெயம் சென்னை சென்றுள்ளார். அங்கு தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர் ராஜேஷ் (வயது 29) என்பவருடன் நேற்று முன்தினம் இரவில் செங்கம் நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி பயணம் செய்த நிலையில், கார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிமேடு கிராமம் அருகே வந்துள்ளது. அப்போது, காரின் டயர் திடீரென வெடித்துள்ளது. Odisha Train Accident: சீரமைப்பு பணிகள் நிறைவு; விபத்து நடந்த பகுதியை கடந்து செல்லும் பயணிகள் இரயில்.. திக்., திக்., தருணங்கள்.!
இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நீன்று கொண்டு இருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ரத்தினா, 2 பெண் குழந்தைகள், உறவினர் ராஜேஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பாலுசெட்டிசத்திரம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்த ராமஜெயம் மற்றும் 3 மாத ஆண் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காஞ்சிபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.