Tamilnadu Rains (Photo Credit : @TamilTheHindu X)

அக்டோபர் 12, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை:

இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வழக்கமாக அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை வட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 16 - 18ஆம் தேதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை எப்போதும் அதிக மழைப்பொழிவை கொடுக்கும். Gold Silver Rate: ரூ.2 லட்சத்தை நோக்கி வெள்ளி.. தீபாவளியை முன்னிட்டு விலை உயர்வு.. ஷாக் நிலவரம்.!

பருவமழை தொடக்கம் எப்போது?

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவ மழை வரும் அக்டோபர் 16-18 தேதிகளில் இந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதே சமயத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு, வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை 16-18 அக்டோபர் 2025 முதல் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை (Chennai Weather):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.