
டிசம்பர் 21, புதுடெல்லி (New Delhi): கூகுள் (Google) நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டு வந்த சுமார் 2500 செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோசடி கடன் ஆப்கள் பற்றிய முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பற்றி அவர் கூறியதாவது, "கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்களுக்கு கடன் வழங்குவதற்கான பாலிசியை கூகுள் மாற்றியுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட பாலிசியின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஆப்கள் மட்டுமே ப்ளே ஸ்டோரில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி அங்கீகரித்த இந்தியாவின் சட்டப்பூர்வமான செயலிகளின் பட்டியலை கூகுள் நிறுவனத்திடம் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பகிர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்த 2,500 போலி செயலிகள் நீக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.