Mobile Network (Photo Credit: Pixabay)

ஜனவரி 03, சென்னை (Technology News): மகா கும்பமேளா (Maha Kumbh Mela) ஒரு குறிப்பிடத்தக்க யாத்திரை ஆகும். இது உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான மக்களை பிரயாக்ராஜுக்கு ஈர்க்கிறது. ஒவ்வொரு 12 வருடத்துக்கும் ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வு, ஆன்மீக, கலாச்சார பரிமாற்றத்திற்கான ஒரு முக்கியமான சந்திப்பாகும். 2025 மேளாவானது வரலாற்றில் மிகப்பெரிய சந்திப்புகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய உலகளாவிய நிகழ்வான இதில் பங்கேற்கவுள்ள, கோடிக் கணக்கான யாத்ரீகர்கள், பார்வையாளர்ளின் தொலைத் தொடர்புத் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்து, மிக உயர்ந்த தரமான சேவையை உறுதி செய்ய மத்தியத் தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கைகள்:

அதன்படி பிரயாக்ராஜ் நகரம், மேளா நடக்கும் பகுதி, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள முக்கிய பொது இடங்கள் முழுவதும் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பை மத்தியத் தொலைத் தொடர்புத் துறை மேம்படுத்தியுள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து யாத்ரீகர்களுக்கும் சிறந்த அனுபவத்தை உறுதி செய்வதற்காக, பிரயாக்ராஜ் நகரப் பகுதி முழுவதும் 126 கிலோ மீட்டர் தூர கண்ணாடி இழை போடப்பட்டுள்ளது. கும்ப மேளா நடக்கவுள்ள பகுதியில், அதிவேக, நம்பகமான தொலைத் தொடர்பு சேவை வழங்குவதற்காக 192 கிலோ மீட்டர் கண்ணாடி இழை கேபிள் (ஓஎஃப்சி) போடப்பட்டுள்ளது.இது தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பின் தரத்தை மேம்படுத்தும். Kerala Police s24 Ultra Zoom Action: வாகன ஓட்டிகளே உஷார்! சாம்சங் எஸ்24 அல்ட்ரா மொபைல் மூலம் விதிமீறல்களை ஜூம் செய்து கண்டுபிடிக்கும் காவல்துறை.!

328 புதிய தொலைத் தொடர்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது அப்பகுதி முழுவதும் தொலைத் தொடர்பை மேலும் வலுப்படுத்ததும். அனைத்து மொபைல் தொழில்நுட்பங்களிலும் மொத்தம் 575 புதிய பேஸ் டிரான்ஸ்ஸீவர் நிலையங்கள் (BTS-பிடிஎஸ்) பயன்படுத்தப்பட்டுள்ளன, கூடுதலாக தற்போதுள்ள 1,462 பிடிஎஸ் அலகுகளை மேம்படுத்தி, மேளாவின் போது நகரத்தில் வலுவான, தடையற்ற இணைப்பு உறுதி செய்யப்படும். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களிலும் முக்கிய பொது இடங்களிலும் தொலைத்தொடர்பு சேவைகள் மேம்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் சீரான நெட்வொர்க் சேவையை உறுதி செய்யும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்த, தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் மேளா பகுதி முழுவதும் 53 உதவி மையங்களை அமைத்துள்ளனர். அனைத்து தொலைத்தொடர்பு கோபுரங்களும் அனுமதிக்கப்பட்ட கதிர்வீச்சு வரம்புகளுக்குள் செயல்படுவதை உறுதி செய்வதற்காக, பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க மின்-காந்த கதிர்வீச்சு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, விஐ ஆகிய நான்கு தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களால் இயக்கப்படும் மூன்று பேரிடர் மேலாண்மை மையங்கள், மேளா பகுதியில் அவசரகால தகவல்தொடர்புகளை ஆதரிப்பதற்கும் எந்தவொரு நெருக்கடி சூழ்நிலையிலும் உடனடி செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் நிறுவப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மேளாவிற்கு தடையற்ற இணைப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மொபைல் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனைகள் முதல் மத சடங்குகளின் நேரடி ஒளிபரப்பு வரை பக்தர்களுக்கு டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.