நவம்பர் 20, டெல்லி (Technology News): வாடிக்கையாளர் வங்கிகளின் சேவை குறைபாடுகளை புகார்களாக வங்கி மேலாளரிடம் அளிக்கலாம். ஒரு வேளை அந்தந்த வங்கிகள் உரிய நேரங்களில் நடவடிக்கைகள் எடுக்கவில்லையெனில் அந்த புகார்களை எடுக்கவும், அதனை விசாரிக்கவும் ‘பேங்கிங் ஆம்பட்ஸ்மேன்’ அமைப்பு, ரிசர்வ் வங்கியால் 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல மாற்றங்கள் செய்து 2021ல் ‘இன்டெக்ரேடட் ஆம்பட்ஸ்மேன் ஸ்கீம்’ என மாற்றியமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆம்பஸ்ட்மேன் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகள், அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் போன்றவையை பேங்கிங் ஆம்பஸ்ட்மேனில் புகார் அளிக்கலாம். வங்கி சாராத நிதி நிறுவனங்கள், உ.தா: பஜாஜ் பினான்ஸ், டாடா கேப்பிடல், ஆதித்யா பிரில்லா பினான்ஸ் போன்றவையை என்.பி.எஃப்.சி (Non-Banking Financial Company) ஆம்பஸ்ட்மேனில் புகார் அளிக்க வேண்டும். வங்கிகள் அல்லாத இணைய பண பரிவர்த்தனைகளில் உ.தா: ஜீபே,போன் பே, பேடிஎம் போன்றவற்றின் மேல் ஏதேனும் புகார் தெரிவிக்க ஆம்பஸ்ட்மேன் ஃபார் டிஜிட்டல் டிரான்ஸாக்ஷனை அணுக வேண்டும். Gold Silver Price: சவரன் தங்கத்தின் விலை எவ்வளவு? இன்றைய விலை நிலவரம் இதோ.!
எதற்கெல்லாம் புகார் அளிக்கலாம்?:
தாமதமான சேவை, சேவை வழங்க மறுப்பது, முன்னறிவிப்பின்றி பெறப்படும் கட்டணம், ஏடிஎம்-ல் பணம் எடுக்க முற்படும் போது பணம் வராமல் டெபிட் ஆனாதாக குறுஞ்செய்தி வந்து வங்கியில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, இன்டர்நெட் பேங்கிங்கில் சேவை குறைபாடுகள், தவறுதலான பணப் பரிவர்த்தனை, லோன்களை திரும்பப் பெறுவதற்காக அதிக தொந்தரவு அளித்தல், பேங் நேரங்களை பின்பற்றாமல் இருத்தல், தவறான வழிகாட்டுதல் என பல குறைகளுக்காவும் இந்த அமைப்பில் புகார்களை அளிக்கலாம்.
2020ல் மட்டும் மூன்று லட்சத்திற்கு மேல் புகார்கள் வந்துள்ளது. வங்கிகளில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த 30 நாட்களில் பதில் வரவில்லை அல்லது பதில்கள் ஏற்றுக்கொள்ளதவாறு இருப்பின் இந்த அமைப்பை நாடலாம்.
ஆம்பட்ஸ்மேனிடம் செல்வதற்கு முன் அறிய வேண்டியவை:
- வங்கிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் முதலில் வங்கி மேலாளரிடம் புகார்தெரிவிக்க வேண்டும் அவர் அந்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தான் ஆம்பட்ஸ்மேனிடம் செல்ல வேண்டும். முதலிலேயே அங்கு புகாரளிக்க கூடாது.
- மேலாளரிடம் புகார் அளித்து 1 வருடத்திற்குள் வங்கி தீர்வு கூறாத பட்சத்தில் ஆம்பட்ஸ்மேனிடம் செல்லலாம்.
- நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த ஒரு வழக்கிற்காக ஆம்பட்ஸ்மேனிடம் செல்ல இயலாது. நீதிமன்ற முடிவே இறுதியானது.
- 20 லட்சத்திற்குள் ஏற்படும் இழப்பீட்டுப் புகார்களை மட்டுமே இந்த அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்படும்.
- இணையதளம், மின்னஞ்சல் அல்லது 14448 என்ற எண்ணில் அழைத்து புகார்களை தமிழிலேயே தெரிவிக்கலாம்.
மின்னஞ்சல்: crpc@rbi.org.in
இணையதளம்: https://cms.rbi.org.in