நவம்பர் 05, நியூயார்க் (World News): அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன், பின் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மறுபக்கம் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிடுகிறார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை பிரசார கூட்டத்தில் ஒருமுறையும், கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு முறையும் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்ல முயற்சி நடந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் பிரச்சாரங்கள் நடந்துக்கொண்டே இருந்தது. சிறு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளதாகக் கருதப்படும் சூழலில், டொனால்ட் டிரம்போ, கமலா ஹாரிஸோ இரண்டு அல்லது மூன்று புள்ளிகளில் முன்னேறி வெற்றியை உறுதி செய்யலாம் என்று பார்க்கப்படுகிறது. Israel Palestine War: இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்.. 4 குழந்தைகள் உட்பட 9 பாலஸ்தீனர்கள் பலி..!
எலக்ட்ரல் வாக்குகள்: அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் யாருக்கும் அதிகமான மக்கள் வாக்கு கிடைக்கிறதோ, அவர்களுக்கே அங்கு இருக்கும் 38 எலக்ட்ரல் வாக்குகளும் அப்படியே வழங்கப்படும். அதாவது ஒரு மாகாணத்தில் மெஜாரிட்டி வாக்குகளை பெறும் வேட்பாளர் அந்த மாகாணத்தின் மொத்த எலக்ட்ரல் வாக்குகளையும் பெறுவார். இதன் காரணமாக தேசிய அளவில் குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் கூட, வெற்றிபெற முடியும். அதாவது மெஜாரிட்டி மாகாணங்களில் எலக்ட்ரல் வாக்குகளை அள்ளினால் போதும்.