Myanmar Earthquake (Photo Credit: @VaultXtra X)

ஏப்ரல் 02, பாங்காக் (World News): அண்டை நாடான மியான்மரில், கடந்த மார்ச் 29ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. இதில், இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்களை கடந்த நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. Myanmar Earthquake: 10000 பேரை காவு வாங்கிய மியான்மர் நிலநடுக்கம்? தோண்டத்தோண்ட வரும் பிணங்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்.!

பலி எண்ணிக்கை அதிகரிப்பு:

இந்நிலையில், மியான்மரின் நய்பிடாவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கி, 91 மணி நேரத்திற்கு பின், 63 வயதான மூதாட்டி ஒருவரை மீட்புக்குழு உயிருடன் மீட்டது. இதற்கிடையே, இடிபாடுகளில் இருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பலி எண்ணிக்கை 2,719 ஆக அதிகரித்துள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்:

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மியான்மரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், போதிய மருத்துவ உதவிகளும் மியான்மர் மக்களுக்கு உடனடி தேவைப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.