ஜனவரி 03, லாஸ் வேகாஸ் (World News): அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக போர்பன் ஸ்ட்ரீட் பகுதியில் மக்கள் ஆட்டம் பட்டத்துடன் கொண்டாடி கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு டிரக் கூட்டத்திற்குள் திடீரென புகுந்ததை பார்த்த மக்கள், அங்கும் இங்கும் அலறியபடி ஓடினர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. ஏராளமானோர் காயமடைந்தனர். உடனடியாக சுதாரித்துக்கொண்டு காவல்துறையினர் சுட்டதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு:
அந்த ஓட்டுநர் டெக்சஸைச் சேர்ந்த 42 வயது ஷாம்சுத்-தீன் ஜப்பார் (Shamsud-Din Jabbar) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. டிரக்கில் ஐஸ் பெட்டியில் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் டிரக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடி பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று நியூ ஆர்லியன்ஸ் மேயர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த டிரக் வடக்கை டிரக் என கண்டறியப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Israel Hamas War: ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் கொலை.. தீவிரமாகும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. !
வெடித்து சிதறிய டெஸ்லா கார்:
அதே சமயம், அமெரிக்காவின் லாஸ் வேகாஸில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் வெளியே நிறுத்தப்பட்டிருந்த, ட்ரம்பின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா கார், திடீரென வெடித்து தீப்பற்றியது. இந்த சம்பவத்தில் காரின் ஓட்டுநர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், “முழு டெஸ்லா குழுவும் கார் வெடித்து சிதறியது தொடர்பாக விசாரித்து வருகிறது” என குறிப்பிட்டு இருந்தார். மேலும் மற்றொரு பதிவில், “வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பட்டாசுகள் அல்லது வெடிகுண்டு காரணமாக வெடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து வாகனத்துடன் தொடர்பில்லாதது. மேலும் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் நடந்த பயங்கரமான சம்பவத்தில் 15 பேர் பலியான சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம். இந்த இரண்டு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட வாகனங்கள் ஒரே கார் வாடகை தளமான டுரோவில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது." என்று விளக்கமளித்தார்.
உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்:
டொனால்ட் டிரம்ப் ஹோட்டல் வெளியே டெஸ்லா சைபர் டிரக் வெடித்து சிதறியதில் உயிரிழந்த அந்த காரின் ஓட்டுநர் அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படையின் உறுப்பினரான மத்தேயு லிவல்ஸ்பெர்கர் (Matthew Livelsberger) என்பதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் நடைபெற்ற விசாரணையில் புதிய திருப்பம் வந்துள்ளது. அந்தக் கார் வெடிக்கும் முன்பே, மேத்யூ தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இருந்ததாக அப்பகுதி ஷெரீஃபான கெவின் (Kevin McMahill) என்பவர் தெரிவித்துள்ளார். அந்தக் காருக்குள், மேத்யூவின் காலடியில் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.