ஆகஸ்ட் 12, வாஷிங்டன் (World News): பாகிஸ்தானின் பிரிவினைவாத அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப் படையை (BLA), அமெரிக்கா ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வளமான மாகாணமான பலூசிஸ்தானைப் பிரித்து தனி நாடாக அறிவிக்கக் கோரி, இந்த அமைப்பு பல ஆண்டுகளாக ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில், 2024ஆம் ஆண்டில் கராச்சி விமான நிலையம் மற்றும் குவெட்டாவில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கு இந்த அமைப்பே பொறுப்பேற்றது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்துடன் அவ்வப்போது மோதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த தொடர் வன்முறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் துணை அமைப்பான மஜீத் படைப்பிரிவு ஆகியவற்றை அமெரிக்கா பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. Shocking Video: வாஷிங்மெஷினில் துணி போட்ட நபர் துடிதுடித்து மரணம்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்.!
பலூசிஸ்தான் விடுதலைப்படை பயங்கரவாதம்:
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிக்கையில், "பலூசிஸ்தான் விடுதலைப் படையின் வன்முறைச் செயல்கள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாகவும் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது, பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் டிரம்ப் நிர்வாகத்தின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான ஆதரவை குறைப்பதற்கு இது ஒரு முக்கியமான படி என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான், அமெரிக்க உறவு:
இந்த அறிவிப்பானது, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமெரிக்கா இப்போது ஆதரவு அளித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், பலூசிஸ்தான் விடுதலைப் படையின் நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தைத் திறக்கக்கூடும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.