ஜூலை 09, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. இவர் விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். கடந்த ஆண்டு இந்திரஜா, கார்த்திக் என்பவரை கரம்பிடித்து தற்போது இருவருக்கும் ஆறு மாத ஆண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் கவனம் செலுத்தாத இந்திரஜா தனது குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைக்கு பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு வந்தார்.
ஆறு மாத குழந்தைக்கு பயிற்சி :
இதனிடையே சமீபத்தில் ஆறு மாத கைக்குழந்தைக்கு ஹெகுரு (Heguru) என்ற பயிற்சி முறையை கற்பித்ததாகவும், இது குழந்தையின் அறிவுத்திறனை வளர்ப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆறு மாத குழந்தைக்கு எதற்கு பயிற்சி?, குழந்தைகளை அவர்களாகவே வளர விடுங்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து தாங்கள் எதிர்கொண்ட விமர்சனத்திற்கு பதிலளித்த இந்திரஜா, அதற்கான விளக்கம் ஒன்றையும் தனது கணவருடன் சேர்ந்து வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் இந்திய அரசு குழந்தை வளர்ப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்களை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தவறான தகவல் :
இந்த நிலையில், இந்திரஜா கூறும் தகவலை பின்பற்ற வேண்டாம் என தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையில், "ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்தரஜா மற்றும் அவரது கணவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையான நிலையில், அதற்கு அவர்கள் விளக்கமளித்து வெளியிட்ட காணொளியில் பல தவறான தகவல்கள் உள்ளன. ஹெகுரு ஒரு கல்விமுறை இல்லை, இது ஒரு Activity என்றும் இந்திரஜா கூறுகிறார். இது தவறான தகவல். சென்னையில் செயல்படும் ஹெகுரு பயிற்சி மையத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் இது ‘JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION’ என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். அவர்களது இணையதளப் பக்கத்திலும் “RIGHT BRAIN EDUCATION” என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். தவறான தகவல்களைப் பரப்பாதீர் !" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பகத்தின் அறிக்கை :
ஹெகுரு பயிற்சி சர்ச்சை : தமிழ்நாட்டில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளதாகத் தவறான தகவலைப் பரப்பும் யூடியூப் தம்பதி !
ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்தரஜா மற்றும் அவரது கணவர் யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட காணொளி சர்ச்சையான நிலையில், அதற்கு அவர்கள் விளக்கமளித்து… pic.twitter.com/xjBd9HoOgq
— TN Fact Check (@tn_factcheck) July 8, 2025