நவம்பர் 11, சென்னை (Chennai News): கடந்த சில மாதங்களாகவே மாநில அளவில் பிரபலமாக இருக்கும் திரைத்துறை நடிகர்கள், நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் அல்லது போன் கால் மூலமாக தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட நடிகை திரிஷா, நடிகர் விஜய் உட்பட பலரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெறும் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரிய வந்தாலும், மிரட்டல் கொடுக்கும் நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு பல்வேறு சிக்கல்களும் நீடித்து வருகிறது.
நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் அருண் விஜய், நடிகை குஷ்பூ, திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் உட்பட ஏழு இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல எஸ்வி சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அதிகாரிகள் விரைந்து சென்று மோப்ப நாய்களுடன் நடிகர் அஜித்குமாரின் வீட்டில் சோதனை நடத்தினர். இது தொடர்பான தகவலால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சோதனையின் முடிவில் அவை புரளி என தெரியவந்துள்ளது.
மோப்ப நாய்களுடன் அதிகாரிகள் சோதனை:
நேற்று மாலை தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்து சிதறி 10 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தில் 24 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மர்ம நபர்கள் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரிய வந்தாலும் மிரட்டல் கொடுக்கும் நபர்களை கைது செய்வதில் காவல்துறைக்கு சிக்கல் நீடித்து வருகிறது.