ஆகஸ்ட் 27, திருவனந்தபுரம் (Kerala News): கேரளாவில் சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான பிரச்சனைகள் குறித்து விசாரிக்கக் கேரள அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் (Hema Committee) அமைத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை (Rape) செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் இதுபோல பல சம்பவங்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்த விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
ஹேமா கமிட்டி: இது தொடர்பான விசாரணை நடத்திய அந்தக் குழு கடந்த 2019 டிசம்பரில் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை, ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு வெளியிட்டது. அதில் மலையாள திரையுலகில் வாய்ப்புக்காக பெண் கலைஞர்கள் அட்ஜஸ்ட்மென்ட் என பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. Hema Committee: நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை பாலியல் புகார்.. ரியாஸ் கான் கூறுவது என்ன?.!
மோகன்லால் ராஜினாமா: இதன் பின் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். நடிகர்கள், ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்ததால் சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். ‘அம்மா’ (AMMA) அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த சித்திக் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரும் பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் ஏற்பட்ட அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை அடுத்து, சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்தார். மோகன்லால் (Mohanlal) ராஜினாமா செய்ததை தொடர்ந்து 17 செயற்குழு உறுப்பினர்களும் தங்களது பொறுப்பில் இருந்து விலகினர்.