ஜூலை 16, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் (Hyderabad) நகரின் நம்பள்ளி பகுதியில் ஒரு மர்மமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியில், ஒரு சிறுவன் தனது பந்தைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு மூடிய வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு எலும்புக்கூட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்து பயத்தில் கத்தியுள்ளார். இந்த வீடு சுமார் 10 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. மகளை கொன்று, கணவர் மீது பழிசுமத்திய தாய்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
மனித எலும்புக்கூடு மீட்பு:
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் கூடி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அங்கு ஒரு மனித எலும்புக்கூட்டை (Human Skeleton) மீட்டனர். அதில் சில எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்தன. அதன் அருகில் ஒரு பழைய நோக்கியா மொபைல் போனும் கண்டெடுக்கப்பட்டது. போனை சார்ஜ் செய்து ஆன் செய்தபோது, அதில் 84 மிஸ்டு கால்கள் காணப்பட்டன. மேலும், இந்த அழைப்புகள் அனைத்தும் 2015ஆம் ஆண்டில் வந்துள்ளன. இதிலிருந்து, அந்த நபர் அதே 2015ஆம் ஆண்டில் இறந்திருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை:
இதனைத்தொடர்ந்து, இறந்தவரை அடையாளம் காணவும், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், எலும்புக்கூடுகளை தடயவியல் விசாரணைக்கு காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கொலை, தற்கொலை அல்லது இயற்கை மரணம் என அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்கம்பக்கத்தினரிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த வீடு அமீர் கான் என்ற நபருக்கு சொந்தமானது. அவர் திடீரென காணாமல் போனதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இந்த வழக்கு காணாமல் போன நபரின் மர்மமாக மாறியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.