Air India Plane Crash (Photo Credit : @khaleejtimes X)

ஜூலை 12, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12ஆம் தேதி விமானம் புறப்பட்ட 32 நொடிகளிலேயே மருத்துவக்கல்லூரி விடுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் விடுதியில் இருந்த 19 பேர் என 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், விமான விபத்து தொடர்பாக புலனாய்வுப் பணியகம் விசாரணை நடத்தி வந்தது. தற்போது விசாரணை அறிக்கையை இந்த குழு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள நிலையில், விமான விபத்துக்கான முக்கியமான காரணமாக என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது. காதலி IPS ஆக வேண்டி 220 கிமீ பாதயாத்திரை சென்ற காதலன்.. நெகிழ்ச்சி சம்பவம்.! 

இறுதி நொடியில் விமானிகள் பேசிக்கொண்டது :

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இரண்டு என்ஜின்களும் செயலிழந்து விபத்தில் சிக்கியது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானிகள் பேசிக்கொண்ட தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி எரிபொருள் செல்லக்கூடிய வால்வை ஏன் அடைத்தீர்கள்? என ஒரு விமானி கேட்க, அதற்கு சக விமானி தான் வால்வை அடைக்கவில்லை என கூறியது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே விமானத்தின் இரண்டு என்ஜின்களும் செயலிழந்து அவசரமாக விமானத்தை இயக்குவதற்கான முயற்சியில் விமானிகள் ஈடுபட்டுள்ளனர்.

எஞ்சின் செயல்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கிய விமானம் :

அப்போது ஒரு என்ஜின் மட்டும் ஓடத்தொடங்கிய நிலையில், மற்றொரு இன்ஜின் முழுவதுமாக செயல்பாட்டை இழந்ததால் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்ட அறிக்கை மட்டும் வெளியான நிலையில், முழுமையான அறிக்கை வெளியிடுவதற்கு ஆறு மாதங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் விமானத்தில் முன்னதாகவே கோளாறு இருந்ததா? அல்லது சதி வேலை ஏதும் நடந்துள்ளதா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.