ஜனவரி 17, புதுடெல்லி: கோவிட் 19 தடுப்பூசிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக தி எக்னாமிக் டைம்ஸ் (The Economic Times) ஊடகம் வெளியிட்ட தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR - ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO - சிடிஎஸ்சிஓ) அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
அதாவது, ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள பதிலில், கோவிட் 19 தடுப்பூசி தொடர்பாக உலக சுகாதார அமைப்பு (World Health Organization - WHO), நோய் கட்டுப்பாட்டு மையம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இணைய தள முகவரிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
இதர தடுப்பூசிகளோடு ஒப்பிடும் போது கோவிட் 19 தடுப்பூசிகளை (Corona Vaccine) செலுத்திக் கொண்டவர்கள், தடுப்பூசி செலுத்திய இடத்தில் வீக்கம், வலி, தலைவலி, தசைவலி, மயக்கம், காய்ச்சல், குளிர் மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட அறிகுறிகளை மிகக்குறைந்த அளவில் உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒரு சிலர் மட்டுமே இந்த அறிகுறிகளின் பாதிப்பை பெருமளவில் எதிர்கொண்டிருப்பதும் தெரியவந்தது.
கோவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்வது, பெரும் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதுடன், இறப்பு விகிதத்தையும் கணிசமாக குறைத்திருப்பதாகவும், நோயின் தீவிரத்தை முறியடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.