ஆகஸ்ட் 18, டெல்லி (Delhi News): இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர், கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல்நலக்குறைவை காரணமாக கூறி, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து, துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து, நேற்று (ஆகஸ்ட் 17) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிறுமியை கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது..!
துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் அறிவிப்பு:
இதன்பின்னர், பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, துணைத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். வரும் செப்டம்பர் 09ஆம் தேதி துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் தரப்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு, யாரை வேட்பாளராக அறிவிப்பது தொடர்பான ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
யார் இந்த சி.பி. ராதாகிருஷ்ணன்?
திருப்பூரைச் சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் (CP Radhakrishnan), 1957ஆம் ஆண்டு, அக்டோபர் 20ஆம் தேதி அன்று பிறந்தார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சுவயம்சேவகர் ஆக தனது 16 வயதில் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1974ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். தொடர்ந்து, 1996ஆம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 1998, 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவையில் இருந்து 2 முறை எம்பி-யாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், கடந்த 2004 - 2007 வரை தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தார். கடந்த 2023ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, ஜூலை 31, 2024 முதல் மகாராஷ்டிர ஆளுநராக பொறுப்பேற்ற அவர், தற்போது வரை பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.