
மார்ச் 11, டெல்லி (Delhi News): தமிழக அரசு மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதனால் மத்திய -மாநில அரசுகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது பகுதி நேற்று (மார்ச் 10)தொடங்கியது. இதில், மும்மொழிக் கொள்கை (Three Language Policy) குறித்து திமுக எம்.பி.க்கள் -ஒன்றிய கல்வி அமைச்சர் இடையே விவாதம் நடந்தது. அப்போது, திமுக எம்.பி.க்கள் ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள். 'நாகரீகமற்றவர்கள்' என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் (MP Dharmendra Pradhan) கூறினார். தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு தி.மு.க. மற்றும் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஒன்றிய அமைச்சருக்கு எதிராக திமுக எம்.பி. கனிமொழி (DMK MP Kanimozhi) உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார். Goods Train Hits Ambulance: ஆம்புலன்ஸ் மீது சரக்கு ரயில் மோதி விபத்து.. மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்..!
திமுக எம்பி கனிமொழி கண்டனம்:
இதுகுறித்து, திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், "தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பணத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது, மும்மொழிக் கொள்கையிலும் தேசிய பொருளாதாரக் கொள்கையிலும் கையெழுத்திட வேண்டும் என்று கூறுகிறது. அவர்கள் தமிழகக் குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். தமிழகக் குழந்தைகளுக்கு வர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என அவர் கூறினார்.