மே 30, பூரி (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரியில் கடந்த 21 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் ஜகந்நாதர் , சுபத்ரா, பாலபத்ரா ஆகிய புனித மும்மூர்த்திகளின் வருடாந்திர நீர் விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக, நேற்றைய தினம் (புதன்கிழமை) நரேந்திர புஷ்கரிணி நீர்த்தேக்கத்தின் கரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்துள்ளனர். அப்போது, திடீரென பட்டாசுகள் வெடித்து (Firecrackers Burst)சிதறியதில், பல பக்தர்கள் தீக்காயம் அடைந்தனர். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Passenger Ran Naked At Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய பயணி; பயணத்தை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை..!
இந்நிலையில், பலத்த காயம் ஏற்பட்ட சிலருக்கு உடல் நிலைமை மிக மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படும் முழு செலவை மாநில அரசு ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது 'X' வலைதளத்தில், 'பூரி சந்தன் திருவிழாவின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்தவர்கள், இறைவனின் அருளால் சிகிச்சையில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம்' என்று பதிவிட்டுள்ளார்.