ஜூலை 10, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே அருகே சாகாப்பூர் பகுதியில் ஆர்.எஸ்.தமானி தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதனிடையே நேற்று முன்தினம் பள்ளியின் கழிவறையில் ரத்தக்கரை படிந்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயம் குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனால் ரத்தக்கரைக்கு காரணம் என்ன?, அதற்கு காரணமானவர் யார்? என கண்டறிய பள்ளியில் பயின்று வரும் 5 முதல் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அனைவரும் கூட்ட அரங்கிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். Trending Video : போதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளம்பெண்.. நடுரோட்டில் களேபரம்.!
மாணவர்களை நிர்வாணப்படுத்தி சோதனை :
அங்கு யார் இந்த காரியத்தை செய்தது என ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் தண்டனை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளை கழிவறைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி சோதனையும் நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ந்துபோன மாணவிகள் வீட்டிற்கு சென்று தங்களது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். மேலும் இது தொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.
மாணவிகளின் பெற்றோர் குமுறல் :
இந்த புகாரின் பேரில் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர், பெண் உதவியாளர் உட்பட எட்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட 7 ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கூறுகையில், "என் மகள் நடுக்கத்துடன் வீட்டிற்கு வந்தார். பிற மாணவர்கள் முன்னிலையில் கழிவறையில் ஆடைகளை கழற்ற கட்டாயப்படுத்தியதாக கூறினார். மனரீதியான துன்புறுத்தலை அவர்கள் செய்துள்ளனர். இது எப்படிப்பட்டது?. அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3