![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1716615958Rameswaram%2520Cafe%2520Hyderabad%2520%2528Photo%2520Credit%2520%2540Cfs_Telangana%2520X%2529-380x214.jpg)
மே 24 ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், மாதாபூர் பகுதியில் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கபே(Rameswaram Cafe) செயல்பட்டு வருகிறது. தென்னிந்திய உணவுகள் விற்பனையில் புகழ்பெற்று விளங்கும் ராமேஸ்வரம் கபேவில் ஹைதராபாத் உணவு பாதுகாப்புத் துறையினர்(Food Safety Department ) ஆய்வு மேற்கொண்டு இருந்தனர்.
காலாவதி தேதி முடிந்தும் உணவுப்பொருட்கள் பயன்பாடு: அப்போது பல அத்தியாவசிய மற்றும் தினமும் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் கெட்டுப்போயும், காலாவதி தேதி முடிந்தும் வைக்கப்பட்டு பயன்பாட்டில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது அம்பலமானது. மார்ச் 24-ஆம் தேதி காலாவதியான பருப்பு 100 கிலோ, தயிர் பத்து கிலோ, பால் எட்டு லிட்டர், 450 கிலோ அரிசி, வெல்லம் 300 கிலோ ஆகிய பொருள்கள் காலாவதி தேதி நிறைவடைந்தும் அங்கு மக்களுக்கு சமைத்து வழங்க பயன்படுத்தப்பட்டது அம்பலமானது.
சீல் வைத்த அதிகாரிகள்: இதனை அடுத்து ராமேஸ்வரம் கபேவிற்கு தற்காலிகமாக சீல் வைத்த அதிகாரிகள், இது குறித்து விளக்கம் அளிக்க கோரி நோட்டீசும் அளித்து சென்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம் கபேவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பயங்கரவாத தாக்குதல் நடந்து இந்தியாவில் ராமேஸ்வரம் கபே குறித்த தகவலானது வைரலானது.
பராமரிக்கப்படாத சமையல் கூடம்: அதனைத் தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட ராமேஸ்வரம் கபேவின் செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல சமையல் கூடத்தையும் அவர்கள் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.