Independence Day 2025 (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 05, சென்னை (Festival News): இந்தியாவில் சுதந்திர தினம் (Independence Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கொண்டாடப்படும் ஒரு தேசியப் பெருவிழா ஆகும். இந்நாள், இந்தியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளையும், தலைவர்களையும் நினைவுகூர்ந்து, கொண்டாடும் ஒரு புனிதமான நாளாகும். ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலையை அடைந்து, ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடாக மாறியதை குறிக்கிறது. இந்த 79ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, முழு கட்டுரை தொகுப்பை இப்பதிவில் காண்போம். Aadi Pournami 2025: ஆடி பௌர்ணமி 2025.. செல்வம் பெருக அம்மன் வழிபாடு.. நல்லநேரம், முக்கியத்துவம் இதோ.!

சுதந்திரப் போராட்டத்தின் பின்னணி:

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி 17ஆம் நூற்றாண்டில், வர்த்தகம் செய்ய இந்தியாவுக்குள் நுழைந்தது. பின்னர், படிப்படியாக நாட்டின் பல பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியா மீது அடக்குமுறை ஆட்சியை கையாண்டார்கள். 1857இல் நடந்த சிப்பாய் கலகம் என அறியப்படும் முதல் சுதந்திரப் போர், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து நடைபெற்ற முதல் மாபெரும் கிளர்ச்சியாகும். இதில், முழுமையாக வெற்றிபெறவில்லை என்றாலும், இது இந்தியர்களின் மனங்களில் சுதந்திர வேட்கையை விதைத்தது. இதன் பிறகு, இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து நேரடியாக இங்கிலாந்து அரசாங்கத்தின் வசம் சென்றது.

தேசபக்தி உணர்வு:

அடுத்தடுத்த ஆண்டுகளில், தேசபக்தி உணர்வு இந்திய மக்களிடையே வேகமாகப் பரவியது. இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற அமைப்புகள் உருவாகி, சுதந்திரப் போராட்டத்தை ஒருங்கிணைக்கத் தொடங்கின. மிதவாதத் தலைவர்களான கோபால் கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி போன்றவர்கள் ஆரம்பத்தில் ஆங்கிலேய அரசிடமிருந்து அரசியல் சீர்திருத்தங்களை மட்டுமே கோரினர். ஆனால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் போன்ற தீவிர தேசியவாதிகள் முழுமையான இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தினர். பாலகங்காதர திலகரின் புகழ்பெற்ற முழக்கமான, “சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்” என்பது லட்சக்கணக்கான இந்தியர்களை எழுச்சி பெற செய்தது.

சுதந்திர போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்கு:

மகாத்மா காந்தி, 1915ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு, சுதந்திரப் போராட்டம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது. அகிம்சை மற்றும் சத்தியாகிரகம் ஆகிய கொள்கைகளை ஆயுதமாகக் கொண்டு அவர் மக்களை ஒன்று திரட்டினார். அவருடைய தலைமையின் கீழ், ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற பல மாபெரும் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றன. குறிப்பாக, 1919இல் நடந்த ஜாலியன் வாலா பாக் படுகொலை, ஆங்கிலேய அரசின் அடக்குமுறையின் உச்சகட்ட உதாரணமாக அமைந்தது. இந்நிகழ்வு, சுதந்திரப் போராட்டத்தின் தீவிரத்தை மேலும் அதிகரித்தது.

ஆயுதம் ஏந்திப் போராட்டம்:

இதனிடையே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங், சுகதேவ், ராஜகுரு போன்ற புரட்சியாளர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். "எனக்கு ரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்" என்ற சுபாஷ் சந்திர போஸின் அறைகூவல், ஆயிரக்கணக்கான இளைஞர்களை இந்திய தேசிய இராணுவத்தில் இணையத் தூண்டியது. பகத் சிங், தன் இளமையையும் உயிரையும் நாட்டுக்காகத் தியாகம் செய்து, இந்திய இளைஞர்களுக்கு ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தினார். ஜான்சி ராணி லட்சுமி பாய், ராணி சென்னம்மா போன்ற வீரப்பெண்கள், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்தனர். Varalakshmi Viratham 2025: வரலட்சுமி விரதம் 2025 எப்போது?.. லட்சுமி தேவியின் அருள் கிடைக்க பூஜை, நல்ல நேரம், வழிபாட்டு முறை இதோ.!

இந்தியர்களின் உயிர் தியாகம்:

ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத், டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்கள் காந்தியுடன் இணைந்து இந்திய தேசிய காங்கிரசை வழிநடத்தினர். அண்ணல் அம்பேத்கர், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். இவர்களின் கூட்டு முயற்சியும், பல்லாயிரக்கணக்கான இந்திய மக்களின் தியாகங்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போராடினர்.

இந்தியப் பிரிவினையும் சுதந்திரமும்:

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டனின் பொருளாதாரம் பலவீனமடைந்ததால், இந்தியாவில் ஆட்சி செய்வது அவர்களுக்குச் சிரமமானது. அதே சமயத்தில், இந்தியச் சுதந்திரப் போராட்டம் உச்சத்தை அடைந்திருந்தது. இதன் விளைவாக, இந்தியாவிற்குச் சுதந்திரம் அளிக்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அப்போது, முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா, முஸ்லிம்களுக்குத் தனிநாடு கோரினார். இதனால், இந்தியா மதரீதியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் என 2 நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. இந்த மத பிரிவினை கோரமான கலவரங்களுக்கும், லட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வுக்கும், உயிரிழப்புக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில், ஜவஹர்லால் நேரு, "உலகின் கண்கள் உறங்கும்போது, இந்தியா சுதந்திரம் மற்றும் வாழ்க்கையின் ஒளியில் விழித்துக்கொள்கிறது" என்று அறிவித்தார். ஆகஸ்ட் 15, 1947 அன்று, இந்தியாவின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற ஜவஹர்லால் நேரு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

இந்திய சுதந்திர தினம் 2025 (Independence Day 2025):

ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 15ஆம் அன்று இந்திய சுதந்திர தினம் 2025 (Suthanthira Thinam 2025) நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில், தலைநகர் டெல்லியில் பிரதமர் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது, நாட்டின் பல்வேறு சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் அணிவகுப்புகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் நடத்தப்படுகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பொது இடங்களில் கொடியேற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்படுகிறது. கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரை போட்டிகள் போன்றவை நடத்தப்பட்டு, சுதந்திரப் போராட்ட வரலாறும், தேசபக்தியும் புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்நாள், மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து இந்தியர்களும் ஒரே தேசத்தின் மக்கள் என்பதை உணர்த்தும் ஒரு நாளாக அமைகிறது.

சுதந்திர இந்தியா:

சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் பஞ்சம், வறுமை, எழுத்தறிவின்மை, பொருளாதாரப் பின்தங்கிய நிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள் எனப் பல பிரச்சனைகள் இருந்தன. ஆனாலும், இந்தியாவின் தலைவர்கள் ஒரு வலிமையான, ஜனநாயக நாட்டைக் கட்டமைக்க அயராது பாடுபட்டனர். டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியாவை நிலைநிறுத்தியது. விவசாயம், தொழில், தொழில்நுட்பம், அறிவியல், விண்வெளி ஆய்வு எனப் பல்வேறு துறைகளில் மகத்தான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் பொருளாதார வலிமை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வறுமை, சமத்துவமின்மை போன்ற பிரச்சனைகளும் இருக்கின்றன.

முடிவுரை:

இந்திய சுதந்திர தினம் என்பது விடுமுறை நாள் மட்டும் அல்ல. இது நம் சுதந்திரத்திற்காகப் போராடிய லட்சக்கணக்கான தியாகிகளுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி ஆகும். இந்நாள், இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் காப்பதற்கும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு நாளாகும். சுதந்திர தினத்தன்று, நம் நாட்டின் பெருமையைக் கொண்டாடுவோம். நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போம். ஒரு சிறந்த இந்தியாவைக் கட்டமைப்போம்.

ஜெய்ஹிந்த்! (Jai Hind)