Chennai City Tsunami (Credit: Wikimedia Commons, Pixabay)

டிசம்பர், 28: கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தமிழக மக்களால் என்றென்றும் மறக்க இயலாத ஒன்று ஆகும். இந்தியா உட்பட 14 நாடுகளில் திடீரென ஏற்பட்ட சுனாமியால் இலட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும் கடலோரப்பகுதி கடுமையான பாதிப்பை சந்தித்தது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டிசம்பர் 26, 2004ல் ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்நாளில் சுனாமியால் தங்களின் உறவுகளை இழந்தோர் பால் ஊற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவ்வாறான பாதிப்பு மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே பலரின் எண்ணமாக இன்று வரை இருந்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியை போல் வேறெங்கும் பெரிய சுனாமி ஏற்ப்படவில்லை.

இந்நிலையில், மற்றொரு சுனாமி தாக்குதலானது ஏற்பட்டால் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதியில் 2 கிலோமீட்டர் தூரம் கடல் நீர் புகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, மீண்டும் ஒரு சுனாமி ஏற்படும் பட்சத்தில் கிழக்கு கடற்கரையில் அரை கிலோ மீட்டர் முதல் 2 கி.மீ வரை கடல்நீர் புகுந்துகொள்ளலாம் என தெரியவந்துள்ளது.

Marina Beach, Chennai.

நெமிலியில் தொடங்கி மாமல்லபுரம், கல்பாக்கம், பெரியகுப்பம், இராயபுரம், கடற்கரை இரயில் நிலையம், கலங்கரை விளக்கம், அடையாறு பாலம் வரையிலும் கடல்நீர் புகுந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2004ல் சுனாமி ஏற்படும்போது கடலூர், நாகப்பட்டினத்தில் 3 கி.மீ வரையில் கடல் நீர் புகுந்தது. சென்னையில் ஒருகிலோமீட்டர் தூரம் கடல் நீர் புகுந்தது.

சுனாமியை பொறுத்தமட்டில் கடந்த 1881ல் அந்தமான் நிகோபார் தீவுகளில் சுனாமி ஏற்பட்டதை தொடர்ந்து, கடத்த 2004ல் மட்டுமே பெரிய சுனாமி ஏற்பட்டுள்ளது. அவை 100 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடும் என்பதால், இனி வரும் ஆண்டுகளில் சுனாமிக்கு வாய்ப்பில்லை என்றும், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 28, 2022 08:50 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).