ஆகஸ்ட் 13, டெல்லி (Delhi News): ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தொடர்பான பண மோசடி வழக்கில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை (Enforcement Directorate) சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில், விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட பல பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. சமீபத்தில், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவர்கொண்டா, ராணா டகுபதி போன்றோர் இதே வழக்கில் ஹைதராபாத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர். தாயின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவன் கொலை.. காதலன் என்கவுண்டரில் பலி..!
சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்:
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்காக 226 ஒரு நாள் போட்டிகள், 18 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 78 டி20ஐ போட்டிகளில் ரெய்னா விளையாடியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியதால், ரசிகர்களால் 'சின்ன தல' என அன்புடன் அழைக்கப்படுகிறார். 38 வயதாகும் சுரேஷ் ரெய்னா, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
விசாரணைக்கு ஆஜரான சுரேஷ் ரெய்னா:
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை முன் ஆஜரான சுரேஷ் ரெய்னாவிடம், அவர் அந்த செயலியை விளம்பரப்படுத்தியதற்கான ஒப்பந்தங்கள், அதற்காக பெற்ற பணம் மற்றும் அந்தச் செயலியின் சட்டவிரோதத் தன்மை குறித்து அவருக்குத் தெரியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.