ஆகஸ்ட் 21, டெல்லி (Delhi News): மாநில அமைச்சர்கள் குழு (GoM), நேற்று (ஆகஸ்ட் 20) மற்றும் இன்று (ஆகஸ்ட் 21) டெல்லியில் ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், குழுவின் தலைவரும், பீகார் மாநில துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரி (Bihar CM Samrat Choudhary) தலைமையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), மத்திய நிதித்துறை இணையமைச்சர் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், ஜிஎஸ்டி வரி முறையை எளிதாக்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு 5%, பிற பொருட்களுக்கு 18% என இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களை அறிமுகப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. GoM Meeting on GST Reforms: அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி குறைப்பு.. காப்பீட்டுத் திட்டத்தில் வரி நீக்கம் குறித்து ஆலோசனை..!
காப்பீட்டு திட்டங்களுக்கு வரி நீக்கம்?
நேற்றைய தினம், புகையிலை போன்ற பொருட்களுக்கு 40% சிறப்பு வரி விதிப்பது மற்றும் இழப்பீட்டு செஸ் வரியை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் மீதான ஜிஎஸ்டி (GST) வரியை நீக்குவதற்கான மத்திய அரசின் திட்டமும் விவாதிக்கப்பட்டது. தற்போது, 18% உள்ள வரியை நீக்கினால், காப்பீட்டுத் திட்டங்கள் பொதுமக்களுக்கு, மலிவாகக் கிடைக்கும். இதன்மூலம், இந்தியாவில் மக்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க முடியும் என குழுவின் தலைவரும், பீகார் துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரி தெரிவித்தார்.
இரண்டு அடுக்கு வரி:
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 22) 2ஆம் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அமைச்சர்கள் குழு, ஜிஎஸ்டிக்கு மத்திய அரசின் இரண்டு அடுக்கு வரி முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப் போவதாகவும், குழுவின் தலைவர் மற்றும் பீகார் மாநில துணை முதல்வரான சாம்ராட் சவுத்ரி தெரிவித்தார். இந்த இரு அடுக்கு முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், 12% மற்றும் 28% வரி முறைகள் முழுமையாக நீக்கப்படும். இதன்மூலம், 5% மற்றும் 18% என்ற புதிய வரி விதிப்பு மட்டுமே செயல்படுத்தப்படும். இதனால், சாமானிய மக்கள் மீதான வரிச்சுமை குறைய வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் முழு ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) கூட்டத்திற்கு, இறுதி முடிவுக்காக அனுப்பப்படும்.