ஜனவரி 24, ஃபதேபூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஃபதேபூர் மாவட்டத்தைச் (Fatehpur District) சேர்ந்தவர் சோட்டலால் கெளதம். இவர், கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கெளரி என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிக்கு சிருஷ்டி (வயது 14) மற்றும் விதி (வயது 6) என்ற 2 பெண் குழந்தைகளும் இருந்தனர். கடந்த ஓராண்டாக கெளதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். Ordnance Factory Blast: திடீரென வெடித்த ஆயுதத் தொழிற்சாலை.. 8 பேர் துடிதுடிக்க பலி.!
சரமாரி தாக்குதல்:
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 22) இரவு இவரது மருமகன் விகாஸ், தனது நண்பர்களுடன் கெளதம் வீட்டிற்கு வந்துள்ளார். இரவு 9 மணியளவில், அனைவரும் ஒன்றாக உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் விகாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து, கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு மொத்த குடும்பத்தையும் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், கெளதமின் 2 மகள்களையும் கழுத்தை அறுத்து கொலை (Murder) செய்தார். இதில், கெளதம் மற்றும் அவரது மனைவி கெளரி படுகாயமடைந்தனர்.
கொடூர கொலை:
இதனையடுத்து, கெளரி சத்தமாக கத்தியுள்ளார். இதில் பயந்துபோன விகாஸ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடினர். அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், விரைந்து வந்தனர். உடனே, இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், காயமடைந்த தம்பதி இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குடும்ப பகை காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தப்பிச் சென்றுள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.