ஏப்ரல் 15, ரங்காரெட்டி (Telangana News): தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி (Rangareddy) மாவட்டத்தில் உள்ள தமர்குடா கிராமத்தில் நேற்று (ஏப்ரல் 14) ஒரு குடும்பத்தில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில், உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அதில், உறவினர்களின் குழந்தைகளான தன்மியா ஸ்ரீ (வயது 5), அபிநயா ஸ்ரீ (வயது 4) மதிய வேளையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். Husband Kills Wife: குடும்ப தகராறில் விபரீதம்.. 8 மாத கர்ப்பிணி பெண் கத்தியால் குத்திக் கொலை..!
மூச்சுத்திணறி பலி:
இந்நிலையில், சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் சிறுமிகள் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அருகில் உள்ள பகுதிகளில் சிறுமிகளை தேடினர். அப்போது, நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினரின் காருக்குள் சிறுமிகள் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, கார் கண்ணாடியை உடைத்து சிறுமிகளை மீட்ட உறவினர்கள், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் சிறுமிகளின் பெற்றோரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
சோகத்தில் மூழ்கிய குடும்பம்:
இதுகுறித்த தகவலின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், விளையாட்டுத்தனமாக காருக்குள் சென்ற சிறுமிகள் கார் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளனர். அப்போது, காரின் கதவுகள் லாக் ஆகியுள்ளன. சிறுமிகளால் காரில் இருந்து வெளியே வரமுடியவில்லை. அதிக வெப்பம், மூச்சுத்திணறல் காரணமாக சிறுமிகள் காருக்குள்ளேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.