ஜூன் 14, நொய்டா (Noida, UttarPradesh): உத்திரபிரதேசம் மாநிலத்தில் (Uttar Pradesh News) உள்ள நொய்டாவில் ஹிம்சாகர் அடுக்குமாடி (Himsagar Apartment) குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் தலைவராக சி.கே கல்ரா பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆண்கள் லுங்கி கட்டிக்கொண்டு வெளியே வரக்கூடாது என்றும், பெண்கள் நைட்டி போட்டுகொண்டு வெளியே வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இவரின் அறிவிப்பு சமூக வலைதளத்தில் பெரிய விவாதத்தை உருவாக்கி செய்தியாகிவிட்ட நிலையில், அவர் தனது அறிவிப்பு குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள விளக்கத்தில், "நான் அனைவரும் ஒன்றிணைந்து ஆடை கட்டுப்பாடை பின்பற்ற வலியுறுத்துகிறேன். அதனால் நைட்டி மற்றும் லுங்கிக்கு இனி தடை விதிக்கப்படுகிறது.
நமது சமூகத்திற்கு தேவையான சிறந்த முடிவு இது. யாருக்கும் எதிரானது இல்லை. பெண்கள் நைட்டி அணிந்துகொண்டு வீதிகளில் உலாவினால் ஆண்களுக்கு சங்கடமாக இருக்கிறது, ஆண்கள் லுங்கி அணிந்து உலாவினால் பெண்களுக்கு சங்கடமாக இருக்கிறது.
இதனால் நாம் அனைவரும் இணைந்து இவற்றை ஒழிக்க வேண்டும். ஆகையால் இனி ஆண்கள் லுங்கி அணிந்து வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது, பெண்கள் நைட்டி அணிந்து வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
உலகத்தில் எவ்வுளவு பிரச்சனைகள் நடந்து வந்தாலும், நமது உள்ளூரில் நடக்கும் பிரச்சனை நம்மை சில நேரம் சிந்திக்கவும், சிந்தை பிதுங்கும் அளவும் இருக்கும். அவ்வகையான சர்ச்சை சம்பவம் தற்போது நடந்துள்ளது. இதனை பாராட்டுவதா? இகழுவதா? என நெட்டிசன்கள் குழம்பிப்போன தருணம் இது.