Aadi Pooram 2025 (Photo Credit: Team LatestLY)

ஜூலை 25, சென்னை (Festival News): தமிழ் மாதமான ஆடியில், பூரம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடிப்பூரம் (Aadi Pooram). அன்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அலங்காரங்கள், வளையல் பிரசாதம் வழங்கப்படும். இந்நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மகாலட்சுமியின் அருளை பெறலாம். இந்நாள் ஆண்டாளின் அவதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டாள் நாச்சியாரை போற்றும் விழாவாகவும், பார்வதி தேவியின் வளைகாப்பு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. Aadi Thiruvathirai 2025: ஆடி திருவாதிரை 2025.. கங்கைகொண்ட சோழபுரத்தில் கோலாகலம்..!

ஆடிப்பூரம் 2025 நாள்:

2025ஆம் ஆண்டு ஆடிப் பூரம் வரும் ஜூலை 28ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. ஜூலை 27ஆம் தேதி மாலை 06.55 மணிக்கு துவங்கி, மறுநாள் ஜூலை 28ஆம் தேதி இரவு 8 மணி வரை பூரம் நட்சத்திரம் உள்ளது. அன்றைய தினம் விநாயகரையும், ஆண்டாளையும், அம்பிகையையும் வழிபடுவது சிறப்பு.

ஆடிப்பூரம்:

ஆடிப்பூரம் அன்று கோவில்களில் அம்மனுக்கு பூக்கள், விளக்குகள், காய்கறிகள், பழங்கள், வளையல் என அலங்கரிக்கப்படுவார். அம்மனுக்கு பட்டு ஆடைகள், நகைகள் போட்டு அலங்கரிப்பர். குறிப்பாக, பெண்களுக்கு கண்ணாடி வளையல்களை பிரசாதமாக கொடுப்பார்கள். ஆண்டாள் பிறந்த நாளை நாம் ஆடிப் பூரமாக கொண்டாடுகிறோம். இந்த நாள் ஆண்டாள் விஷ்ணுவின் மீது வைத்திருந்த பேரன்பை நினைவூட்டுகிறது. ஆடிப்பூர விழா ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாட்கள் உற்சவ விழாவாக கொண்டாடப்படும். மேலும், வைணவ தலங்களில் ஆடிப்பூர விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். திருவண்ணாமலை கோவிலில் 3 நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் 3 நாட்களும் ஆடிப்பூர விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம் சடங்குகள்:

இந்நாளில் அம்மன் சன்னதியில் கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்வார்கள். அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து, அம்மனுக்கு அணிவித்த பிறகு, பிரசாதமாக கொடுக்கப்படும் வளையல்களை அணிந்து கொண்டால் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் அமையும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வாங்கிக் கொடுத்து வழிபட்டால், வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கும் என்பது நம்பிக்கை.