ஏப்ரல் 09, சென்னை (Health Tips): நம் வாழ்க்கையில் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அந்தவகையில், காலையில் உட்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான உணவுகளில் சுரைக்காய் சாறும் (Sorakkai Juice) ஒன்று. இது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் ஒன்றாகும். இதை அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. சுரைக்காய் சாறு, உடலில் உள்ள நச்சை நீக்குவதோடு, செரிமானம் மற்றும் நீரிழப்பு பிரச்சனைகளையும் நீக்குகிறது. மேலும், அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சுரைக்காயின் (Bottle Gourd) குளிர்ச்சியூட்டும் பண்புகள் காரணமாக, கோடையில் இதைக் குடிப்பது மிகவும் நல்லது. தினமும் அதிகாலையில் சுரைக்காய் சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Summer Health Tips: நீச்சல் குளத்தில் அதிக நேரம் இருந்தால் கண்கள் தொற்று; மருத்துவர்கள் எச்சரிக்கை.!
நீரேற்றம்:
சுரைக்காயில் அதிகளவு தண்ணீர் காணப்படுகிறது. இதனை தினமும் குடிப்பதன் மூலம் நீரிழப்பு பிரச்சனையைத் தவிர்க்கலாம். இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தக்க வைக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்:
இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. தினமும் குடிப்பதன் மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம். இது வயிற்றை எளிதில் சுத்தம் செய்து, செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம்:
ஊட்டச்சத்து நிறைந்த சுரைக்காயில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சுரைக்காய் சாறு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
சிறுநீர் பாதை ஆரோக்கியம்:
சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் சுரைக்காய் சாறு உதவியாக இருக்கும். இது UTI தொற்றுகள் போன்ற பிரச்சனைகளைத் தடுக்க பெரிதும் உதவுகிறது.
நச்சு நீக்கம்:
சுரைக்காய் சாறு உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது. சிறுநீரக செயல்பாட்டை அதிகரிப்பதோடு, கல்லீரல் செயல்பாட்டையும் மேம்படுத்துகின்றது.
குறிப்பு: மேல் குறிப்பிட்ட தகவல்களை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.