
மார்ச் 11, சென்னை (Health Tips): இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் ஏற்படுவது சர்க்கரை நோய் (Diabetes) ஆகும். இது நீரிழிவு நோய் எனவும் அழைக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், இதய நோய், நரம்பு பாதிப்பு, கண் பிரச்சனைகள், சிறுநீரக பாதிப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, உணவு கட்டுப்பாடு மிக அவசியம். சில உணவுப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகளில் எது ஆரோக்கியமான உணவு என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Workout Tips: சாப்பிட்ட பின் அல்லது வெறும் வயிற்றுடன் உடற்பயிற்சி.. எது நல்லது? டிப்ஸ் உள்ளே.!
பழங்கள்:
பழங்களை தினமும் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகளவில் உள்ளன. பழங்கள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது. பழங்களை ஜூஸாக அருந்தாமல், அப்படியே சாப்பிடுவதால், இதில் உள்ள நார்சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கிறது.
மீன் உணவுகள்:
நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது, சாதாரண உடல் நிலையில் இருப்பவர்களுக்கும், உணவில் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள் கட்டாயம் இருக்க வேண்டும். சால்மன் மற்றும் நெத்திலி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடுவது, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், DHA மற்றும் EPA ஆகியவற்றை பெற உதவுகிறது. இது சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய சிக்கல்களில் இருந்து உங்கள் இதயத்தைப் பாதுகாக்க உதவும்.
பச்சை இலை காய்கறிகள்:
மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது, பச்சை இலைக் காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். மேலும், அதில் ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளன. அதாவது, எவ்வளவு சாப்பிட்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. கீரை வகைகள் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. வைட்டமின் சி நீரிழிவு டைப்-2 நோயாளிகளுக்கு சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. மேலும், பச்சை இலை கீரைகளில் சிறந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை, உடல் உள்ளுறுப்புகள் பாதிப்பில் இருந்து பாதுகாக்க உதவும்.
முட்டை:
முட்டை, புரோட்டீன் சத்து நிறைந்தது. உடலின் தசைகளுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் முட்டையில் உள்ளன. முட்டையை வேகவைத்து, ஆம்லெட் செய்து அல்லது காய்கறிகளுடன் பொரியல் செய்து சாப்பிடலாம்.
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.