
மார்ச் 07, சென்னை (Health Tips): இன்றைய உணவு பழக்க வழக்கங்களில், நோய்களின் அபாயமும் அதிகமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் 30-40 வயதை தாண்டிவிட்டால், அவர்களின் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வரத் தொடங்கும். குடும்பம் மற்றும் குழந்தைகளின் மீது அதிக அக்கறை காட்டும் பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த தவறுகின்றனர். இதனால், பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக தங்களை அறியாமலேயே பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் நாள்பட்ட நோய்களானது மாதவிடாய் சுழற்சி முதல் கர்ப்பம், இறுதி மாதவிடாய் போன்ற பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டிருக்கக்கூடும். உடலின் ஹார்மோன்களில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களானது, உடலில் பல நோய்கள் வருவதற்கு காரணங்களாக அமைகிறது. அந்தவகையில், பெண்களை அதிகம் தாக்கும் நாள்பட்ட நோய்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். Pets: செல்லப் பிராணிகளை வளர்க்கலாமா? பூனை முதல் முயல் வரை.. அசத்தல் டிப்ஸ் இதோ..!
தைராய்டு:
கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். இந்த தைராய்டு (Thyroid) சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்களானது, உடலின் மெட்டபாலிசத்தை கட்டுப்படுத்துவதோடு, பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பராமரிக்கிறது. தைராய்டு சுரப்பியால் சரியான அளவில் தைராய்டு ஹார்மோன்களை சுரக்க முடியவில்லையோ, அப்போது தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுவதோடு, கருத்தரிக்கும் வாய்ப்பும் பாதிக்கப்படும் மற்றும் விரைவிலேயே இறுதி மாதவிடாயை சந்திக்க நேரிடும்.
மார்பக புற்றுநோய்:
பெண்களின் மார்பகங்களானது மூன்று பகுதிகளால் ஆனது. அவை லோபுல்கள், குழாய்கள் மற்றும் இணைப்புத் திசு. இதில் லோபுல்கள் பாலை உற்பத்தி செய்யும். குழாய்கள் பாலை முலைக்காம்புகளுக்கு கொண்டு செல்லும் மற்றும் இணைப்புத் திசுக்கள் இவையனைத்தையும் ஒன்றாக இணைக்கும். மார்பகங்களில் வளரும் புற்றுநோய் (Breast Cancer) செல்கள் கட்டுப்பாட்டின்றி வளரும்போது, நிலைமை இன்னும் மோசமாகும்.
இதய நோய்:
ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் (Cardiovascular Disease) அபாயம் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி மக்கள் இதய நோயால் இறக்கிறார்கள். அதில், 16.9 சதவீத பெண்கள் இதய நோயால் இறக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்டியோபோரோசிஸ்:
ஆண்களை விட பெண்கள் தான் எலும்பு தொடர்பான நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக வயது அதிகரிக்கும் போது, எலும்புகள் அதன் வலிமையை இழக்கும் மற்றும் எலும்புகளால் புதிய எலும்புகளை உருவாக்க முடியாமல் போகும். இந்நிலையில், ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக எலும்புகள் வேகமாக உடையக்கூடும் மற்றும் எலும்புகளானது மிகவும் பலவீனமாக இருக்கும்.
ஆட்டோஇம்யூன்:
மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தி தான், வைரஸ், பாக்டீரியா போன்ற உடலைத் தாக்கும் நோய்க் கிருமிகளிடம் இருந்து நம் உடலைப் பாதுகாக்கின்றன. ஆனால், ஆட்டோஇம்யூன் நோய்களைக் கொண்டவர்களின் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலமானது, உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை பாதித்து, அதன் விளைவாக சில தீவிர நோய்களை ஏற்படுத்தும். உலகளவில் சுமார் 78% பெண்கள் ஆட்டோஇம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.