ஆகஸ்ட் 20, சென்னை (Festival News): இந்தியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi) ஆகும். இது கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி (Krishna Janmashtami), ஸ்ரீ ஜெயந்தி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை போற்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி:
கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குழந்தை கிருஷ்ணரின் கால் தடங்களை வரைந்து, கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. அதேபோல வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு மகிழ்வதும், கோகுலத்தில் கிருஷ்ணர், கோபியர்களுடன் விளையாடி மகிழ்ந்ததை நினைவு கூறும் விதமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்துவதும் வழக்கமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக நாம் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றோம். ஆவணி மாத தேய்பிறையின் 8-வது நாளான அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில், ரிஷப லக்னத்தில், புதவ்கிழமை நள்ளிரவில் மதுராவில் உள்ள சிறையில் கிருஷ்ணர் அவதரித்ததாக ஸ்ரீமத் பாகவத புராணம் கூறுகிறது. Maha Sankatahara Chaturthi 2024: மஹா சங்கடஹர சதுர்த்தி 2024; நாள், வழிபடும் முறை மற்றும் விரத பலன்கள் என்னென்ன..?
தேதியும், நேரமும்:
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி வருகின்ற ஆகஸ்ட் 26-ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்று காலை 09.02 மணிக்கு அஷ்டமி திதியும், இரவு 09.41 மணிக்கு ரோகிணி நட்சத்திரமும் தொடங்குகிறது. அன்று பகல் முழுவதும் கிருத்திகை நட்சத்திரமே உள்ளது. ஆனால், வேத பஞ்சாங்கங்களின் அடிப்படையில் கிருஷ்ணர் அவதரித்தது நள்ளிரவில் தான் என்பதால், இரவு 12.01 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி பூஜைகளை துவங்கி, அதிகாலை 12.45 மணிக்கு நிறைவு செய்யலாம் என கூறப்படுகின்றது. நள்ளிரவில் செய்யப்படும் இந்த பூஜைக்கு 'நிஷித கால பூஜை' என்று பெயர். மறுநாள் (ஆகஸ்ட் 27) காலை 05.57 மணிக்கு பிறகு பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
விரத முறை:
விரதம் இருக்கும் பக்தர்கள், கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாள் ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி, விரதத்தை தொடங்க வேண்டும். மறுநாளான கிருஷ்ண ஜெயந்தி அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து, அதற்கு அடுத்த நாளே விரதத்தை நிறைவு செய்வார்கள். ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் நிறைவடையும் வரை கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது வழக்கம். ஆனால், சிலர் அஷ்டமி திதி முடியும் வரையிலும், சிலர் ரோகிணி நட்சத்திரம் நிறைவடையும் வரை மட்டும் விரதம் இருப்பார்கள்.
வழிபடும் முறை:
கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரை குழந்தையாக பாவித்து வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு மகிழ்ச்சி, செல்வ வளம், நிறைவான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகமாகும். இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் கிடைக்கும். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து, குழந்தை கிருஷ்ணரை வழிபட்டால், அடுத்தாண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் கிருஷ்ணரே வீட்டில் குழந்தையாக வந்து பிறப்பார் என்பது நம்பிக்கை.