
பிப்ரவரி 26, சென்னை (Festival News): ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில், மகா சிவராத்திரி விழா சிறப்பிக்கப்படுகிறது. சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்துகொண்ட நாளையே மகா சிவராத்திரி தினமாக கொண்டாடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. அன்று, மக்கள் சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுகிறார்கள். இந்நாளில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம், மாலை வேளையில் இருந்து இரவு முழுவதும் சிவபெருமானுக்கு (Lord Shiva)நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; நாள், சிவ வழிபாடு மற்றும் வாழ்த்து செய்திகள் இதோ..!
மகாசிவராத்திரி விரதமுறை:
சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யலாம். விரதம் மேற்கொள்ளும்போது உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். சில கோயில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருப்பார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும்போது தான் எளிதாக வசப்படும். நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காக தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனதை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டற கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூஜைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்து கொள்ளலாம். சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவனை வழிபடும்போது சிவாயநம என உச்சரிக்க வேண்டும். அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. முடியாதவர்கள் எளிய உணவுகளை எடுத்து கொள்ளலாம். மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கு பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
வீட்டில் சிவராத்திரி பூஜை செய்யும் முறை:
வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் துவங்க வேண்டும். மாலை 6.00, இரவு 9.00, நள்ளிரவு 12.00, அதிகாலை 3.00 மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாயநம நமசிவாய என மந்திரத்தை சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம். வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிக்கலாம் அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம். அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.