பிப்ரவரி 26, சென்னை (Festival News): ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில், மகா சிவராத்திரி விழா சிறப்பிக்கப்படுகிறது. சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்துகொண்ட நாளையே மகா சிவராத்திரி தினமாக கொண்டாடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. அன்று, மக்கள் சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுகிறார்கள். இந்நாளில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம், மாலை வேளையில் இருந்து இரவு முழுவதும் சிவபெருமானுக்கு (Lord Shiva)நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; நாள், சிவ வழிபாடு மற்றும் வாழ்த்து செய்திகள் இதோ..!
சிவராத்திரி அன்று கண் விழிப்பது ஏன்?
அன்னையானவள் சிவபெருமானிடம், சிவராத்திரியன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை (சிவனை) பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும், மோட்சங்களையும் அளிக்க வேண்டும், அருள் புரியுங்கள் என்று வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள்புரிந்தார். அந்த இரவே 'சிவராத்திரி' என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று. எனவே சிவராத்திரியன்று சரியான முறையில் கண் விழித்து இருப்பது நன்மை பயக்கும். சிவராத்திரி இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன்பின் தீட்சை தந்த குருவை பூஜை செய்துவிட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணருக்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.
கண் விழித்தலின் புண்ணியம் :
அறிந்தோ அறியாமலோ கூட ஒருவர் சிவராத்திரி அன்று விழித்திருந்தால் புண்ணியம் கிடைக்கும். மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களிலோ, மற்ற கோயில்களிலோ நான்கு ஜாமமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டும், தான தர்மங்கள் செய்தும், சிவபெருமானின் புகழ் பாடியும் புண்ணியம் அடையலாம். சிவராத்திரி தினத்தில் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து சிவாலயத்தில் நடைபெறும் நான்கு ஜாம பூஜை வழிபாடுகளின்போது லிங்க தரிசனம் செய்தால் நன்மை உண்டாகும். சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். மேலும் நினைத்த காரியங்கள் நடக்கும். மகாசிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அர்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படும்.