ஆகஸ்ட் 14, புதுடெல்லி (New Delhi): இந்தியா தனது 78ஆவது சுதந்திர தினத்தை நாளை (ஆக. 15) கொண்டாட உள்ளது, பாகிஸ்தான் இன்று அதன் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. பாகிஸ்தான் சுதந்திர தினம் (Youm-e-Azadi or Pakistan Independence Day) இந்திய சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்பு கொண்டாடப்படுவதற்கு காரணம், இந்திய துணைக்கண்டம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபோது இரண்டு தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டதே.
1947 ஆம் ஆண்டு, இந்திய துணைக்கண்டம் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியா மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தான் என இரண்டு தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. இந்த பிரிவினை, இரண்டு நாடுகளும் தங்கள் சொந்த சுதந்திரத்தை அறிவிக்கவும், தனித்தனி தேசிய கொடிகளை ஏற்றவும், தனித்தனி தேசிய கீதங்களை இசையமைக்கவும் வழிவகுத்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் ஒரே நாளில் சுதந்திரம் அடைந்திருந்தாலும், நிர்வாக ரீதியான காரணங்களால் சுதந்திர தினங்கள் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகின்றன. Is It The 77th Or 78th Independence Day?: இந்தியாவின் 2024 சுதந்திர தின விழா 77ம் ஆண்டா? 78 ஆ?? விபரம் இதோ..!
வரலாறு: பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் லார்ட் மவுண்ட்பேட்டன், பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை அதன் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னாவுக்கு ஆகஸ்ட் 14, 1947 அன்று கராச்சியில் வைத்து மாற்றினார். ஆகஸ்ட் 15 இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர நாடாக மாறும் தேதி என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 14ல், அதிகார பரிமாற்றம் நடந்ததால் பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 ஐ தனது சுதந்திர தினமாக ஏற்றுக்கொண்டது.
மேலும் ரமலான் மாதமும் ஒரு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. 1947ஆம் தேதி ஆகஸ்ட் 14 மற்றும் 15க்கு இடைப்பட்ட இரவு, புனித மாதத்திற்குள் புனித நாளாகக் கருதப்படும் ரமலானின் 27ஆவது நாளுடன் ஒத்துப்போனதால்தான் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற கருத்தும் உள்ளது.
அதுமட்டுமின்றி இந்திய ஸ்டாண்டர்ட் நேரம் (IST) பாகிஸ்தான் நேரப்படி (PST) 30 நிமிடங்கள் முன்னதாக உள்ளது. ஆகஸ்ட் 15 அன்று 12:00 மணிக்கு இந்தியா சுதந்திரம் பெற்றதால், பாகிஸ்தானில் ஆகஸ்ட் 14 அன்று உள்ளூர் நேரப்படி இரவு 11:30 மணி, அதன் காரணமாக ஒரு நாள் முன்னதாக சுதந்திரத்தை கொண்டாடுகிறது என்றும் சொல்கிறார்கள்.