Poondu Chutney (Photo Credit: YouTube)

நவம்பர் 25, சென்னை (Kitchen Tips): பெரும்பாலானோர் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசையைத் தான் சாப்பிட்டு வருகின்றனர். இதற்கு நம் வீடுகளில் சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி என ஒரே மாதிரியாக செய்து சாப்பிடுவோம். இதற்கு பதிலாக, ஒரு முறை செய்தால் 3 நாளைக்கு வைத்து சாப்பிட அருமையான ஒரு சட்னி உண்டு. அதுவும் சற்று காரசாரமாக சாப்பிட விரும்புபவர்களுக்கு இது சூப்பராக இருக்கும். அப்படிபட்ட டேஸ்டியான பூண்டு சட்னி (Poondu Chutney) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Pasipayaru Gravy Recipe: புரதச்சத்து நிறைந்த பாசிப்பயறு கிரேவி செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

வர மிளகாய் - 15

பூண்டு - 30 பல்

தக்காளி - 3

புளி - சிறிதளவு

கல் உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

தாளிக்க தேவையானவை:

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி

உளுந்து - கால் தேக்கரண்டி

கருவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

  • முதலில் பூண்டு பற்களை ஒவ்வொன்றாக எடுத்து தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் எண்ணெய் விட்டுக் கொள்ளவும்.
  • பின்னர், இதில் காம்பு நீக்கிய வர மிளகாய் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, 2 நிமிடம் நன்கு வதக்கிய, மிளகாய் நல்ல வாசமாக உப்பி வரும். செக்க சிவந்து வரும் பொழுது நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை அப்படியே சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பூண்டின் பச்சை வாசம் போக வதங்கி வரும்போது, அதன் நிறம் மாற ஆரம்பிக்கும். இப்போது பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். இந்த சட்னிக்கு கல் உப்பு சேர்த்து அதனுடன் புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளவும். பின் தக்காளி நன்றாக மசிய வதங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
  • ஆறிய இந்த கலவையை மிக்ஸியில் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி, கட்டியாக சட்னி பதத்தில் அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அடுத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், இரண்டு மேசைக்கரண்டி நல்லெண்ணையை சேர்த்து நன்றாக காய்ந்ததும், கடுகு போட்டு பொரியவிட வேண்டும்.
  • பின் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து, உளுந்து வறுபட்டவுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை தாளித்து சட்னியில் கொட்டி இறக்கிக்கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பூண்டு சட்னி தயார்.