Yam (Photo Credit: Facebook)

நவம்பர் 01, புதுடெல்லி (Agriculture Tips): அதிக மருத்துவ குணம் கொண்ட கருணை கிழங்கு சாகுபடி (Yam), விவசாயிகளுக்கு நஷ்டம் உண்டாகாமல் லாபம் கிடைக்க வைக்கிறது. கருணை கிழங்கை விவசாயம் செய்து ஆண்டிற்கு 3 முதல் 4 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ்.

25 வருடங்களாக கருணை மற்றும் சேனை கிழங்கு விவசாயம் செய்து வரும் இவர், கருணை விவசாயத்தை முறையான பராமரிப்புடன் வேளாண் செய்தால் நிச்சயம் ஏக்கருக்கு 15 வரை விளைச்சல் எடுத்து லாபம் ஈட்ட முடியும். கருணைகிழங்கு தை மற்றும் ஆடி பட்டத்திற்கான பயிராகும். நடவு செய்த 8 மாதத்திற்கு மேல் அறுவடை செய்ய முடியும். பிடி கருணைக் கிழங்கு, கொழுக்கட்டை போல் பிடிக்குமாறு இருக்கும் மற்ற கருணை வகைகளை விட இந்த பிடி கருணையில் அதிக சத்துகளும் உள்ளது லாபமும் எதிர்பார்க்கும் கருணை வகையாகும். இதன் செடி 4 முதல் 5 அடி வரை வளரக்கூடியது. பப்பாளியின் இலைகள் போன்று பெரிதாக இதன் இலைகள் இருக்கும் என கருணை கிழங்கை பற்றி கூறியவர் நடவு செய்யும் முறைகளையும் விளக்குகிறார்.

செம்மண், குறுமண், மணற்பாங்கான வடிகால் வசதியுடைய அனைத்து மண்ணிலும் இதை நடவு செய்யலாம். தமிழகத்தின் தட்பவெப்பத்திற்கு உகந்த பயிராக இருக்கிறது. நிலத்தை உழுது, ஏக்கருக்கு 20 டன் தொழுவுரம் இட்டு வடிகால் வசதி அமைக்க வேண்டும். பின் விதைக் கிழங்கை பாத்திக்கு 2 அடி மற்றும் செடிக்கு 1 அடி என்ற இடைவேளையில் நட வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்திற்கு பின் வேப்பம்புண்ணாக்கு, சுடோமோனஸ் இட்டு கிழங்கை சுற்றி மண் அணைக்க வேண்டும். பின் 3 நாட்கள் பிறகு தண்ணீர் தெளிக்க வேண்டும். 15 நாட்கள் பிறகு செடி முளைத்து வெளிவரும். வாரத்திற்கு இரு முறை தண்ணீர் அளித்தால் போதுமானது. கிழங்கு வகைகளுக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீரில் உரங்கள் கலந்தும் அளிக்கலாம். மேலும் சொட்டு நீர் பாசனம் 2 மடங்கு மகசூலை அதிகரிக்கிறது. Astrology: 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள்.. உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள எளிய பரிகாரங்கள்..!

பராமரிப்பும் அறுவடையும்:

களை இல்லாமல் செடியை பார்த்துக் கொள்ள வேண்டும். நடவு செய்த 15 நாட்களிலிருந்து செடிகளுக்கு இடையில் களைகளை எடுத்து பராமரிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை இதை மேற்கொள்ள வேண்டும். களை இல்லாமல் இருப்பது கிழங்குகளின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். இலைகள் பெரிதாக வளர்ந்தால் களைகள் தானாகவே கட்டுப்படும். செட்டு நீர் பாசனமும் களைகளைக் கட்டுப்படுத்தும். நடவு செய்ததிலிருந்து 7 மாதத்திற்கு பின் செடி நன்கு முற்றியதும் பழுத்து கீழே விழத் தொடங்கும். இதன் பின் அறுவடை செய்யலாம். இரண்டு மாதம் காலம் வரை கூட மண்ணிலேயே வைத்து அறுவடை செய்யலாம். இதனால் இதன் சுவையும் அதிகரிக்கும்.

நோய்த் தாக்குதல்:

மற்ற பயிர்களை போலவே இதிலும் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் இருக்கும். தண்டுகளில் அழுகல் நோய் மற்றும் வைரஸ் தாக்குதலும் ஏற்படும். அஸ்வினி பூச்சித் தாக்குதலும் ஏற்படும். ஆனால் மற்ற பயிர்களை விட சேதம் குறைவுதான் இதையும் முழுதும் சரி செய்து பயிர்களை பாதுகாக்க முடியும். வேப்பக்கரைசல், பஞ்சகவ்யம், சூடோமோனாஸ், மூலிகை பூச்சி விரட்டிகளை போன்றவையைப் பயன்படுத்தி நோய் மற்றும் பூச்சித் தாக்குதலை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். இப்பயிர், மருந்துக்கு அதிக செலவு ஏற்படுத்தாது. சுழற்சி முறையில் பயிர் செய்தால் மண்வளமும் மேம்படும்.

விதைக்கிழங்கு தேர்வு:

ஏக்கருக்கு 1 டன் விதைக் கிழங்குகள் தேவைப்படும். விதைக் கிழங்கு பழைய கிழங்காக இருக்க வேண்டும். அறுவடை செய்தவுடனேயே முளைப்பு தன்மை ஏற்படாது. மண்ணில் 2 மாதங்கள் வைத்திருந்த கிழங்குகளுக்கு தான் முளைப்பு தன்மை ஏற்படும் அதை எடுத்து நடவு செய்ய வேண்டும். விதைக் கிழங்குகள் விலை அதிகமாக இருப்பதால், முதன் முதலில் கருணை விவசாயத்தில் ஈடுபடவிருக்கும் விவசாயிகள், குறைந்த இடத்தில் தோட்டம் அமைத்து வளர்க்கலாம். அதிலிருந்து விதைக் கிழங்கை எடுத்து பெரிய அளவில் விவசாயம் மேற்கொள்ளலாம் என ஆலோசனையும் வழங்குகிறார் கோவிந்தராஜ்.

கருணை கிழங்கு கெடவோ, அழுகவோ செய்யாது. அதனால் இதை பல மாதங்கள் வைத்திருந்து சமைக்கலாம். ஒரு சில புது கிழங்கில் சிறிது காரத்தன்மை காணப்படும். புளி அல்லது எலுமிச்சை சேர்த்து சமைத்தால் காரத்தன்மை நீங்கி விடும். மதிப்புக் கூட்டி பொடி செய்தும் விற்க முடியும்.