
மார்ச் 04, சென்னை (Chennai News): மண்புழு உரம் தயாரித்து அதை பயிர்களுக்கு அளிக்கையில் நிலத்தில், நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, மண் வளத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மண் புழு உரத்தை விவசாயிகளே தங்களுக்கு தேவையானவையை உற்பத்தி செய்து தயாரித்துக் கொள்ளலாம். இது பயிர்கள் மற்றும் நிலத்திற்கு இயற்கையாக ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.
மண்புழுக்கள் மட்கும் கழிவுகளையும், மண்ணையும், உண்டு கால்நடைகளின் கழிவுகளில் வளரும் தன்மையடையவை. மண்புழுக்கள் மண்ணிற்குள் ஊடுருவி நிலத்தில் காற்றோட்டத்தை அதிகரித்து வேர்களுக்கு எளிமையான சுவாசத்திற்கு வழிவகுக்கிறது.
மண்புழுத் தேர்வு:
மண்புழு உரம் தயாரிக்க தேர்வு செய்யும் மண்புழுக்கள் அதிக உணவை உட்கொண்டு செரித்து, வெளியேற்றும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். உதாரணமாக ஆப்ரிக்கன் மண்புழு என்று அழைக்கப்படும் யூட்டிரில்லஸ் யூஜினியே அதிக எண்ணிக்கையில் வளர்ந்து, அதிக அளவு கழிவுகளை மக்க வைக்கும் தன்மை கொண்டவை. குறைந்த கால இடைவெளியில் அதிகளவு மண்புழு உரத்துடன் அதிக புழுக்களையும் உற்பத்தி செய்ய இது சிறந்த புழுவாகும்.
மண்புழு உரம் தயாரிக்க நிலப்பரப்பின் மேல் வாழக்கூடிய மண்புழுரகம் உபயோகப்படுத்த வேண்டும். மண்ணின் ஆழத்தில் வாழக்கூடிய மண்புழுவானது, மண்புழு உரத்தின் உற்பத்திக்கு உகந்ததல்ல. உரத்திற்கு மண்ணின் மேற்பரப்பில் வளரும் மண்புழுக்களான யூட்ரில்லஸ், எய்சீனியா மற்றும் பிரியானிக்ஸ் மண்புழுக்கள் சிறந்ததாக உள்ளது.
அனைத்து வகையான மட்கும் கழிவுகளை உட்கொள்ளும் விதமாக இருக்க வேண்டும்.
ஆப்ரிகன் மண்புழு (யூடிரிலஸ் யுஜினியே), சிவப்பு புழு (எய்சினியா ஃபோய்டிடா), மக்கும் புழு (பெரியானிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண்புழுக்களாகும். Chicken Heat Stress: கோடையில் கோழிகளுக்கு வெப்ப பாதிப்பு.. பாதுகாக்க சில வழிமுறைகள்!
மண்புழு உரத் தயாரிப்பு:
மண்புழு உரத்தை தயாரிக்க, மட்கக்கூடிய கழிவுகளை சேகரிக்க வேண்டும். அதிலுள்ள உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான், இரும்பு போன்ற பொருட்களை பிரித்து எடுத்து விட வேண்டும். மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக் கரைசலை தினமும் தெளித்து, 20 நாட்களுக்கு மட்கவிட வேண்டும். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக மாறி இருக்கும். அல்லது கால்நடை கழிவுகளை எடுத்து 3 நாட்களுக்கு லேசாக உலரவிட்டு நேரடியாகப் மண்புழு உரம் தயாரிக்க உபயோகிக்கலாம்.
மண்புழு உரப்படுக்கை தயாரித்தல்:
மண்புழு உரம் தயாரிக்க நிழலான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். வெளியிடங்களில் அமைப்பவர்கள் கூரை அமைத்து மழை, வெளியில் இருந்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேலும் மட்கும் கழிவுகளை சாக்கு போட்டு மூடி வைக்க வேண்டும்.
மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் செல்லக் கூடும். தேவைக்கேற்ப படுக்கை, வாளி, பிளாஸ்டிக் பேக்குகள் அமைத்துக் கொள்ளலாம். விவசாய நிலத்திற்கு, 2 அடி உயரம், 3 அடி அகலத்திற்கு மண்புழு உரம் படுக்கை, சிமெண்ட் தொட்டிபோல் அமைக்கலாம். அதிக நீரை வெளியேற்ற தொட்டியை சற்று சாய்வாக அமைத்து நீர் வெளியேறும் குழாய் அமைக்க வேண்டும்.
உற்பத்தி முறை:
படுக்கையில் 3 செ.மீ-க்கு நெல், உமி, தென்னை நார்கழிவு இதை போட்டு நிரப்பி, இதற்கு மேல் மணல் மற்றும் தோட்டகால மண்ணை 3 செ.மீ -க்கு நிரப்ப வேண்டும். இதன் மேல் தண்ணீர் தெளித்து விட்டு, இதற்கு மேல் பாதியளவு மக்கிய கழிவுகளையும், அதற்கு மேல் 30 சதவீதம் கால்நடை கழிவையும் கலக்கி இட வேண்டும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை இருக்குமாறு போட வேண்டும்.
ஈரப்பதம் 60 சதவீதம் இருக்க வேண்டும். இதன் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். தேவையான அளவு மண்புழுகளை இட வேண்டும். தினமும் தண்ணீர் தெளிப்பது உரம் தயாரிக்க அவசியமானதாகும். உரம் எடுக்கப்போகும் முன்னர் தண்ணீர் தெளிப்பதை நிறுத்திவிடலாம்.
அறுவடை:
மண்புழுக்கள் மேலிருந்து கழிவுகளை சாப்பிட்டு துகள்கள் போல உரமாக மாற்றிச் செல்லும். அதன் பின், படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவுகளை மட்டும் அறுவடை செய்யலாம். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். கைகளால் லேசாக எடுக்க வேண்டும் மண்புழுக்கள் தெரியும் வரை இதனை செய்ய வேண்டும்.
மண்புழு உரம் தயாரித்த பின்பு உரத்தை, சல்லடையில் இட்டு சலிக்கும் பொழுது, நன்றாக மக்கிய உரம் மற்றும் மக்காத கழிவுகள் தனித்தனியாக பிரித்து கிடைத்துவிடும். புழுக்கள் இருந்தாலும் தனியே எடுத்து விடலாம். மக்காத கழிவுகளை மறுபடியும் மண்புழு படுக்கையில் உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம். சேகரித்த உரத்தை காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். இந்த உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிரிகள் அதிக அளவில் வளரும்.
உரம் சேமிப்பு:
அறுவடை செய்த உரத்தை சூரிய ஒளி இல்லாத இடத்தில் சேமிக்கலாம். உரத்தில் உள்ள ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாக்கெட்டில் சேமிப்பதை விட திறந்த வெளியில் சேமித்து அவ்வப்போது தண்ணீர் தெளித்து வர வேண்டும். இதனால் நுண்ணுயிரிகள் அழிவதைத் தடுக்கலாம். உரத்தில் 40% ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். தேவையான சமயத்தில் மட்டும் பாக்கெட்டில் போட்டு விற்றுக் கொள்ளலாம்.
பயிர்களுக்கு மண்புழு உரத்திலுள்ள சத்துக்கள்:
கரிமச்சத்து - 9.5-11.98 %
தழைச்சத்து - 0.5-1.5%
மணிசத்து - 1 - 0.3 %
சாம்பல் சத்து - 0.15 - 0.56%
சோடியம் - 0.06 - 0.30 %
கால்சியம்-மெக்னீசியம் - 22.67 - 47.6 மி.இக்/100 கிராம்
தாமிரச்சத்து - 2 - 9.5 மி.கிராம்/கிலோ
இரும்புச்சத்து - 2 - 9.3 மி.கிராம்/கிலோ
துத்தநாகச்சத்து - 5.7 - 11.55 மி.கிராம்/கிலோ
கந்தகச்சத்து - 128-5485 மி.கிராம்/கிலோ
பயன்கள்:
மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்களான அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பேக்டீரியாக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. மண்புழு உரம் இயற்கை முறையில் இருப்பதால் மண்வளத்தை மேம்படுத்தும். நச்சற்ற உரமாகவும் மண்புழு உரம் உள்ளது. பொருளாதார ரீதியாகவும் மண்புழு உரத்தை குடிசைத்தொழிலாக செய்ய முடியும். பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து மண்புழு உரத்தில் நிலை பெறச் செய்கிறது.